ஆனைமலை அருகே தனியார் குடோனில் 45 டன் மானிய விலை யூரியா பதுக்கல்: அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

ஆனைமலை: வேளாண்துறை சார்பில், விவசாயிகளுக்கு வழங்கும் மானிய விலை யூரியாவை, சட்டவிரோதமாக பதுக்கி, கேரளாவிற்கு கடத்தும் சம்பவம் பொள்ளாச்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து, பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்தியநாதன் தலைமையில் தமிழக -கேரளா எல்லையில், வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கணபதிபாளையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் மானிய விலை யூரியாவை பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன், ஆனைமலை தாசில்தார் வெங்கடாச்சலம் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் இரவு கணபதிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த நிறுவனம், பசை தயாரிக்கும் நிறுவனம் என்பதும், விவசாயத்திற்கு பயன்படுத்தும் மானிய விலை யூரியாவுடன் ரசாயனங்களை கலந்து, பசை தயாரிப்பதும், மேலும் யூரியா முட்டைகளை பதுக்கி கேரளாவிற்கு கடத்துவதும் தெரியவந்தது.

இதையடுத்து குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் 45 டன் மானிய விலை யூரியாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும், குடோன் உரிமையாளரான கேரளாவை சேர்ந்த முஸ்தபா என்பவர் மீதும் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்ய சப்-கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்.

Related Stories: