மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிரில் பாதுகாப்பு லடாக்கில் இந்திய வீரர்களுக்கு கதகதப்பான ஸ்மார்ட் முகாம் : சுடுதண்ணீர், மின்சாரம் உட்பட சகல வசதிகளும் தயார்

புதுடெல்லி: கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்களுக்கும் குளிர்காலத்தை தாங்குவதற்கான அனைத்து வசதிகளும் செய்யும் பணி நிறைவடைந்து உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா - சீனா இடையே கடந்த மே மாதம் தொடங்கிய எல்லை பிரச்னை மோதல், தற்போது வரை நீடித்து வருகிறது. இதன் காரணமாக பதற்றமான சூழல் ஏற்பட்டதால், இரு நாடுகளின் வீரர்களும் லடாக் எல்லையில் குவிக்கப்பட்டு உள்ளனர். எல்லை பிரச்னையை சுமூகமாக தீர்ப்பதற்கு இருநாடுகளும் ஒப்புக் கொண்டதை அடுத்து ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது இதுவரை 8 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதில், வீரர்களை இருநாடுகளும் திரும்ப பெறுவதற்கு ஒப்புக் கொண்டதாகவும் அது எழுத்துபூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிகின்றன. இதன் காரணமாக, எல்லையில் குவிக்கப்பட்ட இருநாடுகளையும் சேர்ந்த தலா 50 ஆயிரம் வீரர்கள் திரும்ப பெறப்படாமல் உள்ளனர்.

இதனிடையே, லடாக்கில் குளிர்காலம் தொடங்கி விட்டது. அதை சமாளிப்பதற்காக இந்திய வீரர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்யும் பணி முடிந்து விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த ஒருங்கிணைந்த வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் முகாம்கள் மட்டுமின்றி, மின்சாரம், தண்ணீர், வெப்பப்படுத்தும் வசதி, சுகாதாரம் மற்றும் உடல் நலம் பேணுவதற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன முகாம்கள் சமீபத்தில் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லையின் முன்களத்தில் நிறுத்தப்பட்டுள்ள படை வீரர்கள், கதகதப்பான வெப்பத்தை அளிக்கும் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், எந்த ஒரு அவசிய தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு போதுமான உள்கட்டமைப்பு வசதிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்திலும் படை வீரர்களின் செயல்திறனை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்திய ராணுவம் செய்து கொடுத்துள்ளது.

இந்திய, சீன வீரர்கள் இருக்கும் கிழக்கு லடாக்கில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியசாக உள்ளது. லே 10,500 அடி உயரமாகும். இந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிகரங்கள் 18,000 அடி உயரமாகும். இங்கு பனிப் புயல்கள் ஏற்படலாம். வெப்பநிலையானது மைனஸ் 40 டிகிரி செல்சியசுக்கும் கீழ்  வரை செல்லக்கூடும். எனவே, அங்குள்ள இந்திய வீரர்களை பொருத்தவரை சீதோஷ்ணநிலையை சமாளிப்பதற்கு ஏதுவான வசதிகள் அல்லது குறைந்தபட்சம் முடிந்த வரையிலான வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டியது அவசியமாகும். குளிர்கால ஆடைகள் மட்டுமல்ல கதகதப்பை தரும் கூடாரங்கள், மின்சாரம், சூடான நீர் உள்ளிட்டவை அடிப்படை தேவையாகும்.

சீனாவும் மும்முரம்

லடாக்கில் சமீப வாரங்களாக சாலை அமைத்தல், பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சீன ராணுவம் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக குளிர்காலத்தை சமாளிப்பதற்கு சீன ராணுவ வீரர்கள் தயாராகி வருகின்றனர். சுமார் 50ஆயிரம் ராணுவ வீரர்கள் குளிர்காலத்தில் தங்குவதற்கான இடங்கள், அவர்களுக்கு தேவையான உடைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது. உண்மையான கட்டுப்பாடு கோடு பகுதியில் ஏற்கனவே உறைபனி சூழல் நிலவி வருகிறது.

ரோடாக், காங்சிவார் மற்றும் சைடில்லா மற்றும் பல பகுதியில் வீரர்களுக்கான தங்குமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது. பியூ, மபோடாங், பகுதிகளில் தற்காலிக குளிர்கால குடியிருப்புக்கள் உள்ளது. சில இடங்களில் இந்த பணிகள் முடிந்துள்ளன. சில இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன. கல்வான் அருகே சிப்சாப் பகுதி, ஸ்பான்குர் பகுதிகளில் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: