மோடியின் வெற்றியை எதிர்த்த வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. எல்லைப் பாதுகாப்பு படையில் வீரராக இருந்தவர் தேஜ்பகதூர். வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு மிக மோசமாக இருப்பதாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டார். இதனால், பணி நீக்கம் செய்யப்பட்டார். இவர், கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், வாரணாசி தொகுதியில்  பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. இத்தொகுதியில் மோடி வெற்றி பெற்றார்.

இந்நிலையில், தனது வேட்பு மனுவை நிராகரித்ததால்தான் வாரணாசி மக்களவை தொகுதியில் மோடி வெற்றி பெற்றதாகவும், அதை செல்லாது என்று அறிவிக்கும்படியும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பகதூர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், 2019ம் ஆண்டு டிசம்பரில் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பகதூர் மேல்முறையீடு செய்தார்.  தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு இதை விசாரித்து வந்தது.  இந்த வழக்கு நேற்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது பகதூர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முதலில் சுயேச்சை வேட்பாளராகவும் பின்னர் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராகவும் பகதூர் மனு தாக்கல் செய்ததாக வாதிட்டர். மேலும், இது பற்றி விரிவாக விவாதிப்பதற்காக  விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரினார்.

இதை கேட்டு கோபமடைந்த நீதிபதிகள், ‘விசாரணையை ஒத்திவைப்பதற்கான சுதந்திரத்தை உங்களுக்கு ஏன் வழங்க வேண்டும்? சட்டத்தின் நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறீர்கள். விசாரணைய ஒத்திவைக்க முடியாது. தேஜ் பகதூரின் வேட்பு மனு தகுதியின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டதா? அல்லது தகுதி இருந்தும் நிராகரிக்கப்பட்டதா? என ஆராயப்படும்,’’ என கூறிய நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: