திருப்பரங்குன்றம் கோயிலில் கந்தசஷ்டி விழா துவங்கியது; நவ.20ல் சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய விழாவான சூரசம்ஹாரம் நவ.20ல் நடைபெறுகிறது.  முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று காலை கந்தசஷ்டி விழா சண்முகருக்கு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. வழக்கமாக சண்முகருக்கு காப்பு கட்டியவுடன் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி ஏழு நாட்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதமிருப்பர். கொரானா தொற்று காரணமாக கோயிலில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான பக்தர்கள் இன்று காப்பு கட்ட வந்த நிலையில், கோயில் நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் அவர்களை கோயிலுக்குள் சென்று காப்பு கட்ட அனுமதிக்கவில்லை. இதனால் கோயில் வாசலில் நின்று முருகப்பெருமானை வணங்கியபடி கையில் காப்பு கட்டி சென்றனர். இன்று துவங்கிய விழா 21ம் தேதியுடன் நிறைவடைகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க 19ம் தேதி நடைபெறும் வேல் வாங்குதல், 20ம் தேதி நடைபெறும் சூரசம்ஹாரம் ஆகிய நிகழ்வுகள் உள் விழாவாக கோயிலுக்குள் நடத்தப்படும். இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: