சமூக வலைத்தளங்களில் இருந்து ‘இரண்டாம் குத்து’ பட டீசரை நீக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இரண்டாம் குத்து பட டீசரை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சமூகநீதி கல்வி பண்பாட்டு மைய செயலர் பெருமாள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தின் டீசர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் காட்சிகள் உள்ளன. டீசர் வெளியான சில மணிநேரத்தில் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். சமூகத்தை சீரழிக்கும் வகையிலான பல வசனங்கள் உள்ளன. இரட்டை அர்த்த வசனங்கள் அதிகமாகவே உள்ளன. தற்போது பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர். அவர்களை பாதிக்கும் வகையில் இந்த காட்சிகள் உள்ளன. இதன்மூலம் மாணவர்கள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புண்டு.

இந்தப் படத்தை வெளியிட தடை விதித்தும், சமூக வலைத்தளங்களில் பரவும் டீசரை நீக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதேபோல், லட்சுமி என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘இந்த படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. இரட்டை அர்த்த வசனங்கள் நாகரீகமற்ற முறையில் உள்ளன. இதுபோன்ற படங்களால், பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும். எனவே இதை தடுக்க வேண்டியது அவசியம்’’ என்றனர். பின்னர் நீதிபதிகள், மனுவிற்கு உள்துறை செயலர், தகவல் தொழில்நுட்பத்துறை செயலர், டிஜிபி, படத்தின் இயக்குநர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்கவும், சமூக வலைத்தளங்களில் உள்ள இந்த படத்தின் டீசரை உடனடியாக நீக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டு விசாரணையை டிச. 3க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: