தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு : வென்றதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் சிறிது நேரத்தில் தோற்றதாக கூறியதால் சர்ச்சை

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் முதல் முறையாக நடக்கும் சட்டப்பேரவை தேர்தலான பீகாரில் நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் பெரும் குளறுபடிகள் நடந்தன. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை 12 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதில், பாஜ முன்னிலை பெற்றாலும், பாஜவுக்கும் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணிக்கும் இடையே வெறும் 10 தொகுதிகள் மட்டுமே வெற்றி வித்தியாசம் உள்ளது. எனவே இதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பரபரப்பு குற்றம்சாட்டினார். அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியதாவது: குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் அதிகாரிகள்  வேண்டுமென்றே தாமதப்படுத்தினர். எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெற்றும் கூட சான்றிதழ் வழங்காமல் தாமதித்தனர்.

முதல்வர் நிதிஷ்குமாரும், துணை முதல்வர் சுஷில் குமார் மோடியும் தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுத்து, வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்த தொகுதிகளில் தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதப்படுத்தினர். முதலில் 119 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வேட்பாளர்கள் வென்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்கான பட்டியலையும் அதன் இணையதளத்தில் வெளியிட்டது. தேர்தல் அதிகாரிகள் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்டனர். இதுபோன்ற ஊழல்கள் ஜனநாயகத்தில் என்றும் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே மின்னணு இயந்திரத்தில் முறைகேடு செய்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. இதனை தேர்தல் ஆணையம் மறுத்து விளக்கமளித்தது. அதைத் தொடர்ந்து தேஜஸ்வியும் வாக்கு எண்ணிக்கை குறித்து குற்றம்சாட்டி உள்ளார். மேலும், இது தொடர்பாக ஆர்ஜேடி சார்பில் தேர்தல் ஆணையிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

வாக்குறுதியை நிறைவேற்றுமா பாஜ?

 பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தை விட, அதன் கூட்டணியில் இடம் பெற்ற பாஜ அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றது. இதனால், ஆளும் கூட்டணியின் மூத்த கட்சி என்ற அந்தஸ்தை ஐக்கிய ஜனதா தளம் பறி கொடுத்ததோடு, 15 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிதிஷ் குமாருக்கு இது பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்பாக, ‘பாஜ தனியாக அதிக தொகுதிகளை வென்றாலும், முதல்வர் விஷயத்தில் எந்த சந்தேகமும் இருக்காது, நிதிஷ்தான் முதல்வர்’ என பாஜ மேலிடம் உறுதி அளித்தது. ஆனால், நேற்று மாலை ஐக்கிய ஜனதா தளம் பின்தங்க, பாஜ  தலைவர்களின் பேச்சுகள் மாறத் தொடங்கின.

‘மக்கள் ஆதரவை இழந்து விட்ட நிதிஷ் மீண்டும் முதல்வராகக் கூடாது,’ என சிலர் பேட்டி கொடுத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், நிதிசுக்குதான் முதல்வர் பதவி தந்து பாஜ தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென ஐக்கிய ஜனதா தளம் கூறியிருக்கிறது.

லண்டன் ரிட்டன் புஷ்பா நோட்டாவிடம் வீழ்ந்தார்

லண்டனில் படித்து விட்டு திரும்பிய 28 வயதான இளம்பெண் புஷ்பம் பிரியா சவுத்ரி, புளூரல்ஸ் என்ற பெயரில் கட்சியை தொடங்கி, பீகார் தேர்தலில் போட்டியிட்டார். தனது கட்சி சார்பில் டாக்டர், இன்ஜினியர், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை களமிறக்கினார். கட்சியின் முதல்வர் வேட்பாளராக தன்னையே அறிவித்து பிரசாரத்தில் குதித்தார். 2030க்குள் பீகாரை ஐரோப்பா ஆக்கிக் காட்டுவேன் என பிரசாரத்தில் பிரமாதப்படுத்தினார்.

ஆனால், அவருக்கு பீகார் மக்கள் படுதோல்வியை பரிசாக தந்தனர். பாட்னாவில் உள்ள பாங்கிபூர் மற்றும் மதுபனி மாவட்டத்தில் பிஸ்பி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட புஷ்பா, டெபாசிட் கூட பெறவில்லை. பிஸ்பி தொகுதியில் நோட்டாவை விட குறைவான வாக்கு பெற்றார். இதனால், வாக்கு எண்ணிக்கையின் போதே, ‘மின்னணு வாக்கு இயந்திரம் ஹேக் செய்யப்பட்டு விட்டது’ என டிவிட்டரில் அவர் கொளுத்தி போட, தேர்தல் ஆணையம் அதற்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தது. புஷ்பாவின் தந்தை வினோத் சவுத்ரி, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமாருடன் நெருக்கமாக உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: