இந்தியாவில் 40% கல்வெட்டு தமிழில் தான் உள்ளது... தமிழகத்தில் உலக தரம் மிக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும் : மாபா. பாண்டியராஜன் பேட்டி

டெல்லி : இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் நேற்று மத்திய கலாச்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் படேல் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குனர் வித்யாவதி ஆகியோரை அவர்களது அலுவலகத்தில் நேரில் சந்தித்தார். இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது,

தொல்லியல், பண்பாடு, அருங்காட்சியகம் மேம்பாடு தொடர்பான ஆலோசனைகளுக்காக டெல்லி வந்துள்ளேன். இதில் முக்கியமாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில், ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பாக முழுமையாக அறிக்கை விரைவில் வெளியிட வேண்டு. உலக தரம் மிக்க அருங்காட்சியகம் தமிழகத்தில் அமைக்க இடம் தருவது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அவ்வாறு அமைக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் மத்திய அரசு கேட்கும் இடம் கொடுக்கப்படும் என அவரிடம் தெரிவித்துள்ளேன். அதற்கு மாநில அரசும் தயாராக இருக்கிறது.

 மேலும் எழும்பூர் அருங்காட்சியகம் உலகம் தரமிக்கவையாக மாற்ற ரூ.140 கோடி தேவை என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.10 கோடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரூ.100 கோடி வரை கிடைக்கும் என நம்புகிறோம். மேலும்

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிற்பங்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வருவதாற்காக 15 பேர் கொண்ட மத்திய குழு ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நகரங்களில் ஆய்வு நடத்தியது. இதையடுத்து இந்தியாவின் 15 சிலைகள்  இன்னும் ஒரு வாரத்தில் கொண்டுவர உள்ளது.

தமிழகத்தை இந்தியாவில் பழமை வாய்ந்த இடமாக மாற்ற மைசூரில் உள்ள கல்வெட்டுகளின் பிரதிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். இதைத்தொடர்ந்து வரும் 10ம் தேதி முதல் அது புதுப்பொலிவுடன் திறக்கப்படும். அதற்கான பணிகளும் மத்திய அரசுடன் இணைந்து விரைவில் செய்யப்படும். அதேப்போல் தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, செக்காட்டி, முளக்கரை, பொட்டல், கொட்டு, திரடு  உள்ளிட்ட 6 இடங்களில் அகழாய்வு பணிகள் தொடங்க விரைவில் தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கும்.

இந்தியாவின் தொன்மை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழுவில் கட்டாயம் தமிழர்கள் உட்பட தென் மாநிலங்களை சேர்ந்த பலரும் அதில் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்தியாவில் 40சதவீத கல்வெட்டு தமிழில் தான் உள்ளது. மேலும் தொல்லியல் துறை இயக்குனராக முதல் முறையாக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளது பெருமையான ஒன்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: