மதுரவாயல் பறக்கும் சாலைப்பணி துவங்க கோரி 10ம் தேதி திமுக போராட்டம்: மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: மதுரவாயல் பறக்கும் சாலைப்பணிகளை துவக்கக் கோரி வரும் 10ம் தேதி திமுக போராட்டம் நடத்த இருப்பதாக மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார். சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் சட்டமன்ற தொகுதி, தெற்கு பகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்  மாவட்ட செயலாளரும், சைதாப்பேட்டை எம்.எல்.ஏ.,வுமான மா.சுப்பிரமணியன் தலைமையில் போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் நடந்தது. திமுக பாக  முகவர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திமுக தலைமை கழக வழக்கறிஞர் முத்துக்குமார், பாக முகவர்களின் பணிகள் குறித்து  விளக்கினார். பின்னர், மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:  மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கொண்டு வந்த  மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை 2011ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு முடக்கியது.

இதுகுறித்து திமுக எம்.பி.க்கள் கூட நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர்.  அண்மையில், முதல்வர் எடப்பாடியை சந்தித்த மத்திய அமைச்சர்  நிதின்கட்கரி ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஈரடுக்கு மேம்பாலம் அமையும் என தெரிவித்திருந்தார். இந்த திட்டம் ஏற்கனவே திட்டமிட்ட மதுரவாயல்  பறக்கும் சாலை திட்டமா அல்லது வேறு எங்காவது சாலை அமைக்கின்றனரா? ஏற்கனவே, மதுரவாயல் பறக்கும் சாலை திட்டப்பணியில் ரூ.500  கோடி செலவிடப்பட்டு 30 சதவீத பணிகள் நடந்துள்ளன. தற்போது மத்திய அமைச்சர் அறிவித்துள்ள சாலை பணிகள் ஏற்கனவே கட்டப்பட்ட  தூண்களில் அமைக்கப்படுமா அல்லது மாற்று திட்டம் உள்ளதா என பல்வேறு குழப்பம் உள்ளது. இதுகுறித்து எந்த அறிவிப்பும் முறையாக  அறிவிக்கப்படவில்லை. அதேபோல், பணிகளும் நடைபெறவில்லை.

எனவே, உடனடியாக மதுரவாயல் உயர்மட்ட சாலைப் பணியை துவக்க வலியுறுத்தி வரும் 10ம் தேதி திமுக சார்பில் மதுரவாயலில் மிகப்பெரிய  அளவில் இந்த பாலத்திற்காக அமைக்கப்பட்ட பாலத்தின் தூண் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த  போராட்டத்திற்கு காவல் துறையினரின் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதி வழங்காவிட்டாலும் மதுரவாயலில்  போராட்டம்  நடைபெறும். வரும் சட்டமன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் திமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.  நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் காரம்பாக்கம் கணபதி, நொளம்பூர்  ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: