தங்க கடத்தல் வழக்கில் கைதான ஐஏஎஸ் சிவசங்கர் சொத்துகளை முடக்குகிறது அமலாக்கத் துறை: சாப்பிடாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர்,  சாப்பிடாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருகிறார்.  

அவரது சொத்துக்களை முடக்க மத்திய அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. கேரளாவில் ஐக்கிய அரபு எமிரேட் தூதரகம் மூலமாக பல நூறு மதிப்புள்ள தங்கத்தை கடத்திய வழக்கில் சொப்னா என்ற பெண்ணும், அவருக்கு உடந்தையாக இருந்த கும்பலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கடத்தல் வழக்கில் தொடர்புடைய, கேரள மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், கேரள முதல்வர் பினராய் விஜயனின் முதன்மை செயலாளராக இருந்தவருமான சிவசங்கரின் முன்ஜாமீன் மனு சில தினங்களுக்கு முன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், சிவசங்கரை கைது செய்த போது அவர் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு  ஒத்துழைப்பு அளித்தார். ஆனால், நீதிமன்ற காவலில் விசாரணை தொடங்கப்பட்ட பிறகு, பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்து வருகிறார். மேலும், கைது செய்யப்பட்ட நாள் முதல் சரியாக சாப்பிடாமல் முரண்டு பிடித்து வருகிறார்.

இதனால், நேற்று முன்தினம் அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அதிகாரிகள் உடனடியாக மருத்துவர்களை அழைத்து அவரை பரிசோதித்தனர். இந்நிலையில், விசாரணையில் இருந்து தப்பிக்கும் நோக்கத்தில் சிவசங்கர் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வருவதால், அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். கருப்புப் பண தடுப்பு சட்டத்தின் 5வது பிரிவுபடி அவருடைய சொத்துகளை முடக்குவது குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இதன்படி, சிவசங்கரின் பினாமி முதலீடு என சந்தேகப்படும் எந்த சொத்துகளையும் விசாரணை முடியும் வரையில் அமலாக்கத் துறை முடக்கி வைக்கலாம்.

* தப்பிக்கும் முயற்சி?

‘சிவசங்கரிடம் தினமும்  காலை 9 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விசாரணை நடத்த வேண்டும். ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கும் இடையே அரை மணிநேரம் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதன்படியே, அவரிடம் விசாரணை நடந்து  வருகிறது. 7 நாள் மட்டுமே விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால், சாப்பிடாமல் முரண்டு பிடிப்பதன் மூலம் அதில் இருந்து தப்பி விடலாம் என சிவசங்கர் கருதுவதாக தெரிகிறது.

Related Stories:

>