சேலத்தில் தீபாவளி வியாபாரம் தொடங்கியது; கடைவீதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பு: குற்றப்பிரிவு போலீசார் ரோந்து

சேலம்: சேலத்தில் தீபாவளி வியாபாரம் தொடங்கியுள்ள நிலையில், கடைவீதிகளில் பண்டிகை கால திருடர்களை கண்காணித்து பிடிக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனால், புத்தாடைகள் எடுப்பதற்கு கடைவீதிகளுக்கு மக்கள் திரண்டு வருவது தற்போது தொடங்கியுள்ளது. சேலம் டவுன் கடைவீதியில் அதிகப்படியான ஜவுளிக்கடைகள் இருப்பதால், இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வரத்தொடங்கியுள்ளனர். இதேபோல், 4 ரோடு, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள ஜவுளிக்கடைகளின் முன்பும் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இக்கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்க மாநகர துணை கமிஷனர் செந்தில் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகளவு கூட்டம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்பேரில், சேலம் டவுன் சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, 2வது அக்ரஹாரம் பகுதியில் டவுன் போலீசார், கண்காணிப்பு கோபுரங்களை அமைத்துள்ளனர். ராஜகணபதி கோயில், கன்னிகாபரமேஸ்வரி கோயில், சின்னக்கடை வீதி சந்திப்பு பகுதி என 3 இடங்களில் இந்த கண்காணிப்பு கோபுரங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மீது போலீசார் இருந்துக் கொண்டு, 4 புறத்திலும் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா? என கண்காணிக்கவுள்ளனர்.  

வரும் நாட்களில் கூட்டம் பெருமளவு வரும் என்பதால், முன்கூட்டியே போலீசார் தயாராகியுள்ளனர். அதேபோல், பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட வசதியாக ஆங்காங்கே ரேடியோக்களை கட்டிடவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேபோல், 4 ரோடு பகுதியில் பள்ளப்பட்டி போலீசார், கண்காணிப்பு கோபுரம் அமைத்துள்ளனர். அங்கு வரிசையாக 3 ஜவுளிக்கடைகள் இருப்பதால், கூட்டம் அதிகளவு கூடி வருகிறது. அதனால், திருடர்களை கண்காணித்து பிடிக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் குற்றப்பிரிவு போலீசார், மப்டியில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “தீபாவளி ஜவுளி விற்பனை தொடங்கியுள்ளதால், ஜவுளிக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. சாலையோரங்களிலும் புதிய கடைகள் தற்போது வைக்கப்பட்டு வருகிறது. அதனால், திருட்டு சம்பவங்களை தடுக்க தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பை மேற் கொண்டுள்ளோம். பொதுமக்கள், உடமைகளை பாதுகாக்க மிக கவனமுடன் செயல்பட வேண்டும். அதேபோல், கொரோனா பரவலை தடுக்க சுகாதார விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என அறிவுறுத்துகிறோம்,’’ என்றனர்.

Related Stories: