மனைவியை கொன்று உடலை துண்டாக்கி வீசிய வழக்கு : 4 வயது மகள் அளித்த சாட்சியால் தந்தைக்கு ஆயுள்; ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஜெய்ப்பூர், :மனைவியை கொன்று உடலை துண்டாக்கி வீசிய வழக்கில் 4 வயது மகள் அளித்த சாட்சியால் தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2016 அக். 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்த போது, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் நகர் போலீசார் ​இரவு 11.45 மணியளவில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். புறா பூங்கா அருகே மனித உடல்கள் வெட்டப்பட்ட நிலையில், ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. சம்பவ இடத்தில், ஒரு கால் விரல், கை விரல்கள், உடலின் சதைப் பகுதிகள் கிடந்தன. அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த உறுப்புகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அடுத்த நாள் நகரின் பிற பகுதிகளில் இதேபோன்று உடலின் பாகங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டது.

நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். சந்தேகத்தின்பேரில் நவ. 4ம் தேதி, யோகேஷ் மல்ஹோத்ரா என்பவரை கைது செய்தனர். விசாரணையில், தனது மனைவி ஆர்த்தியை ேயாகேஷ் கொலை செய்ததாகவும், ஆதாரங்களை அழிக்க சடலத்தை கத்தியால் வெட்டி பல்வேறு பகுதிகளில் போட்டதாகவும் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கின் பின்னணி குறித்து போலீசார் கூறுகையில், ‘கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் வசித்த ஆர்த்தியை யோகேஷ் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை இருந்தது. கொலையான ஆர்த்தி, பல வீடுகளுக்கு சென்று வீட்டு வேலைகளை செய்து சம்பாதித்து வந்தார். கைதான யோகேஷ், தன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்ததால், இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டது. அதனால் தீபாவளி நாள் இரவு தன் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்தார். இதனை அவரது 4 வயது மகள் பார்த்துள்ளார். ஆதாரங்களை அழிக்க, அவர் தனது மனைவியின் உடல்களை துண்டித்து நகரத்தின் வெவ்வேறு இடங்களில் வீசியுள்ளார்’ என்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை நேற்று ராஜஸ்தானின் ஆல்வார் நகரைச் சேர்ந்த கூடுதல் மாவட்ட மற்றும்  அமர்வு நீதிபதி சந்தீப் ஆனந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மனைவியை எரித்துக் கொன்று உடல் பாகங்களை வெட்டி நகரின் பல பகுதிகளில் வீசியெறிந்த யோகேஷ் மல்ஹோத்ராவுக்கு ஆயுள்  தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த  வழக்கில் சம்பவத்தில் நேரில் பார்த்த இறந்தவரின் நான்கு வயது மகளின் வாக்குமூலம் முக்கிய சாட்சியாகும்’ என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>