சிறுமியை கொடுமைபடுத்திய சிவில் நீதிபதி சஸ்பெண்ட்

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்திய புகாரில் சிவில் நீதிபதி தீபாலி சர்மா நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள மாவட்ட நீதிமன்ற சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் தீபாலி சர்மா. அரித்துவாரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 13 வயது சிறுமி ஒருவர் வீட்டு  வேலை செய்து வந்தாள். அவளை பெண் நீதிபதி தீபாலி சர்மா சித்ரவதை செய்து வந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அரித்துவார் மாவட்ட நீதிபதி ராஜேந்திரசிங் அளித்த அறிக்கை அடிப்படையில், 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் தீபாலி சர்மா  வீட்டில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நீதிபதி வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது, உடலில் காயங்களுடன் இருந்த சிறுமி மீட்கப்பட்டாள்.  தொடர்ந்து நீதிபதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், நீதிபதி தீபாலி சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரை பணிநீக்கம் செய்ய உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற அமர்வு தீர்மானம் நிறைவேற்றியது. மாநில அரசு  பரிந்துரையின் பேரில், அம்மாநில கவர்னரும் ஒப்புதல் அளித்ததால், நீதிபதி தீபாலி சர்மா நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டார்.

Related Stories: