பயண நேரம், அரை மணி நேரமாக குறையும்: பெரி வார்ப் - மாண்ட்வா இடையே விசைப்படகு போக்குவரத்து எப்போது?: நவ.15க்கு பிறகுதான் என்கிறது துறைமுக வட்டாரம்

மும்பை: பெரி வார்ப் - மாண்ட்வா இடையே விசைப்படகு போக்குவரத்து சேவை நவம்பர் 15ம் தேதிக்கு பிறகுதான் வரும். அதற்கு முன்பு தொடங்குவதற்கு வாய்ப்பே இல்லை என மும்பை துறைமுக பொறுப்புக்கழகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரும் முக்கிய நகரங்களில் ஒன்றாக மும்பை நகரம் திகழ்கிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளை ஈரக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பெரி வார்ட்டில் இருந்து மாத்வா வரை 17 கி.மீ தொலைவுக்கு விசைப்படகு போக்குவரத்து தொடங்க திட்டமிட்டுள்ளது.

இதுபோல் மிதவை வானூர்தி (ஹோவர்கிராப்ட்) சேவை தொடங்கும் திட்டமும் உள்ளது. இதற்கான மேலும் அதிக காலம் ஆகும் என துறைமுக பொறுப்புக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, மும்பை துறைமுக பொறுப்புக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:படகு சேவைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, 6 ஏஜென்சிகளை தேர்வு செய்து வைத்துள்ளோர். இன்னும் இது இறுதி செய்யப்படவில்லை. படகு போக்குவரத்து சேவை தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளோம். அதாவது, மேற்கண்ட இடங்களுக்கு இடையே ஒரு நாளில் எத்தனை சேவைகள் இயக்க முடியும் என கேட்டுள்ளோம். அவர்கள் இவை தொடர்பான விவரங்களை ஒரு வாரத்தில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர்கள் கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொண்டு, தங்கள் விவரங்களை சமர்ப்பிக்கலாம்.

படகு சேவையில் கிடைக்கும் லாபம், துறைமுக பொறுப்புக் கழகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும். இருப்பினும், லாப நோக்கதிற்காக மட்டும் இந்த சேவையை தொடங்க உத்தசிக்கவில்லை. முதலில் இதற்கான வரவேற்பு எந்த அளவுக்கு உள்ளது என பார்க்க வேண்டும். இதனால், படகு சேவையை வழங்க வரும் நிறுவனங்களுக்கு, அவர்களின் விருப்பப்படி சில சலுகைகள் வழங்கப்படலாம். தற்போது, கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து மக்கள் படகுகளில் சென்று வருகின்றனர். இருப்பினும் இந்த சேவை மக்களுக்கு கூடுதல் தேர்வாக அமையும். அதோடு, நெரிசல் குறைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன என மும்பை துறைமுக பொறுப்புக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நெருல் படகுத்துறை கட்டுமானம் மார்ச்சில் நிறைவடையும்

நவிமும்பை மற்றும் மும்பை இடையே கடல் வழி போக்குவரத்துக்காக பிரத்யேகமாக நெருல் படகுத் துறை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் ₹111 கோடி மதிப்பிலான இந்த திட்டப் பணிகள், கொரோனா பரவல் ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்தன. இருப்பினும், பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இயங்கத் தொடங்கும் எனவும் மகாராஷ்டிரா நகர மற்றும் தொழில்துறை மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் சஞ்சய் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

 இந்த துறை இயங்கத் தொடங்கினால், மும்பையில் சாலைப் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பயணிகள் பார்க்கிங் செய்துவிட்டு பயணம் செய்ய ஏதுவாக, கார் மற்றும் டூவீலர் நிறுத்துவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.  இதுபோல், மாந்த்வா துறை பணிகளும் நிறைவு நிலையில் உள்ளதால், மாந்த்வா - பவுச்சா தாக்கா இடையிலான ரோ ரோ படகு சேவை பிப்ரவரியில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* மும்பையில் நீர்வழி போக்குவரத்து வசதி தொடங்குவதற்கு சுமார் 30 ஆண்டுகளாகவே மும்பையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

* 1996ம் ஆண்டில் சில தனியார் நிறுவனங்கள் ஹோவர் கிராப்ட் சேவையை தொடங்கி முன் வந்தன. அப்போது, குளிர் சாதன வசதியுடன் 50 பேர் பயணம் செய்யலாம்.

* இதில், ஜூஹூவில் இருந்து கிர்கவும் சவுபட்டி கடற்கரை வரை 40 நிமிடத்தில் பயணிக்கலாம்.

* இருப்பினும் ஒரு நாளில் ஒரு சேவை மட்டுமே இயக்கப்பட்டது. கட்டணம் ஒரு நபருக்கு ₹100. துரதிருஷ்டவசமாக இந்த சேவை 1998ல் நிறுத்தப்பட்டு விட்டது. நிறுவனத்துக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதே இதற்கு காரணம்.

Related Stories: