லடாக் எல்லையில் பிடிபட்ட சீன ராணுவ வீரர் உளவாளி?

புதுடெல்லி: லடாக் எல்லையில் பிடிப்பட்ட சீன ராணுவ வீரரிடம் மொபைல் போன், தகவல் சேமிப்பு சாதனம், படுப்பதற்கான பொருட்கள் இருந்ததால், அவர் உளவு பார்க்க வந்திருக்க கூடுமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. லடாக் எல்லையில் டெம்சோக் பகுதியில் அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவ வீரர் வாங் யாங் லா, கடந்த 19ம் தேதி இந்திய ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டார். அப்போது, அவர் தனது எருமையை தேடி, வழி தவறி வந்து விட்டதாக கூறினார். இதையடுத்து, அவருக்கு ஆக்சிஜன், மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டது. பின்னர், சீன ராணுவமும் காணாமல் போன தனது வீரரை பற்றி இந்தியாவுக்கு தகவல் தெரிவித்தது.

இதையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட பிறகு, இரு தினங்களுக்கு முன் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.இந்நிலையில், வழி தவறி வந்த சீன ராணுவ வீரரிடம் படுக்கை வசதிகள், மொபைல் போன், தகவல் சேமிப்பு சாதனம் ஆகியவை இருந்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், இந்திய எல்லையில் உளவு பார்ப்பதற்காக சீன ராணுவத்தால் அவர் அனுப்பப்பட்டு இருக்கக் கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுபோன்ற நிலையில், ராணுவம் அவரை ஒப்படைத்தது சர்ச்சையாகி இருக்கிறது.

Related Stories: