‘அயிட்டம்’ என்று சொன்னது தப்புதான்..! : மன்னிப்பு கேட்டார் மாஜி முதல்வர் கமல்நாத்

போபால்,:மத்திய பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பெண் வேட்பாளரை ‘அயிட்டம்’ என்று சொன்னது தப்புதான் என்று பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் முன்னாள் முதல்வர் கமல்நாத் மன்னிப்பு கேட்டார். மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் இமர்தி தேவி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர். கடந்த மார்ச் மாதம், கமல்நாத்துக்கு எதிராக ஜோதிராதித்ய சிந்தியா போர்க்கொடி உயர்த்தியபோது, அவருடைய ஆதரவாளர்களான இமர்தி தேவி உள்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஜோதிராதித்ய சிந்தியாவுடன் சேர்ந்து பாஜவில் சேர்ந்தனர். அதையடுத்து, கமல்நாத் ஆட்சி கவிழ்ந்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா உள்ளிட்ட காரணங்களால் காலியாக உள்ள 28 சட்டசபை தொகுதிகளுக்கு நவ. 3ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில், குவாலியர் மாவட்டம் டாப்ரா (தனி) தொகுதியில் இமர்தி தேவி போட்டியிடுகிறார்.அத்தொகுதியில் பிரசாரம் செய்த கமல்நாத், ‘இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுபவர் (இமர்தி தேவி) ஒரு அயிட்டம்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சு, அம்மாநில தேர்தல் பிரசாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கமல்நாத் பேச்சை கண்டித்து முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மற்றும் அமைச்சர்கள், பாஜ நிர்வாகிகள் நேற்று மவுன விரதம் போராட்டம் நடத்தினர்.

இவ்விவகாரத்தை கண்டித்து மகளிர் ஆணையமும் கமல்நாத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. சோனியா காந்திக்கு, முதல்வர் சவுகான் கடிதம் எழுதினார். தேர்தல் ஆணையமும், கமல்நாத்திடம் விளக்கம் கேட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் இமர்தி தேவி விவகாரம் பூதாகரமாக மாறியதால், நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், ‘எனது பேச்சில் எவருக்காவது அவமரியாதை ஏற்பட்டிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவமரியாதையாக பேசியதாக அவர்கள் கூறுகிறார்கள்.

எது அவமரியாதைக்குரிய விஷயம்? நான் பெண்களை மதிக்கிறேன். நான் பேசியதை அவமரியாதை  என்று நினைத்தால், இதற்காக நான் வருந்துகிறேன். மத்திய பிரதேசத்தின் உண்மையான பிரச்னைகள் 15 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளன. ஆனால், அவர்கள் (பாஜக) கடந்த 7 மாதங்களாக மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். அவர்களை வெற்றிபெற விடமாட்டேன்’ என்றார்.

Related Stories: