காஞ்சிபுரம் அருகே நிலமோசடி வழக்கில் 2 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி பகுதியில் 2.30 ஏக்கர் புன்செய் நிலத்துக்கு ரூ.79,70,000 முன்பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த புகாரில் காஞ்சிபுரம் செங்கழுநீரோடை பகுதியைச் சேர்ந்த 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். காஞ்சிபுரம், செங்கழுநீரோடை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீநாத் பாலாஜி, அவரின் தந்தை நாகராஜ். இவர்களுக்கு காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி பகுதியில் சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான 2.30 ஏக்கர் புன்செய் நிலம் உள்ளது. இந்த நிலத்தை காஞ்சிபுரம் மாமல்லன் நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவரின் மகன் அக்ஷய் ஆகியோரிடம் ரூ.1,39.20,000 க்கு விற்பனை செய்வதற்காக முன்பணமாக ரூ.79,70,000 பெற்றுக்கொண்டு கடந்த மார்ச் 2019 ல் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

ஒப்பந்தக் காலம் முடிவடைந்தும் பணம் செலுத்துவதாகவும் இடத்தை கிரையம் செய்து தருமாறு ரவிச்சந்திரன் மற்றும் அவரின் மகன் அக்ஷய் ஆகியோர் கேட்டுள்ளனர். ஆனால் ஸ்ரீநாத் பாலாஜி மற்றும் நாகராஜ் ஆகியோர் கிரையம் செய்ய முன்வராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில் இதே இடத்தை கண்ணன் என்ற வேறொரு நபருக்கும் விற்பனை செய்வதற்காக நாகராஜன் குடும்பத்தினர் முன்பணம் வாங்கியிருப்பது ரவிச்சந்திரனுக்கு தெரியவந்துள்ளது. எனவே, ரவிச்சந்திரன் மற்றும் அவரின் மகன் அக்ஷய் காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய குற்றப் பிரிவு போலீசார் ஸ்ரீநாத் பாலாஜி, நாகராஜ் ஆகிய 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: