பாஜ பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து காங். தலைவர் கமல்நாத்துக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்

போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜ பெண் அமைச்சர் குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தை கூறியதற்காக காங்கிரஸ் தலைவர் கமல்நாத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. மத்தியப்பிரதேசத்தில் காலியாக உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 3ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. டாப்ரா தொகுதியில் பாஜ சார்பாக இமார்தி தேவி போட்டியிடுகிறார். இவர், காங்கிரசிலிருந்து பாஜவுக்கு தாவிய ஜோதிராதித்யா சிந்தியா தலைமையிலான 21 அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவராவார். எம்எல்ஏக்கள் கட்சி தாவியதால் கமல்நாத் அரசு கவிழ்ந்தது. பாஜவில் இணைந்த இமார்தி தேவிக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. தற்போது அவர் டாப்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து களமிறங்கி உள்ளார்.

இந்நிலையில் அத்தொகுதியில் நேற்று முன்தினம் நடந்த பிரசார கூட்டத்தில் பங்கேற்ற கமல்நாத், ‘‘காங்கிரஸ் சார்பில் இத்தொகுதியில் போட்டியிடுபவர் மிகவும் சாதாரணமானவர். ஆனால், இவரது எதிராளி ஒரு ‘அயிட்டம்’’’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். கமல்நாத்தின் இந்த பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர். கமல்நாத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் போபாலில் 2 மணி நேரம் மவுன போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கமல்நாத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கும் மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அரசியல் களத்தில் இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

* உங்கள் மகளை கூறினால் எப்படியிருக்கும்?

இது தொடர்பாக இமார்தி தேவி கூறுகையில், “ இதுபோன்ற நபர்கள் மத்தியப்பிரதேசத்தில் இருப்பதற்கு உரிமை இல்லாதவர்கள். காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அவர் ஒரு பெண் மட்டுமல்ல தாயும் கூட. அவரது மகளை குறித்து யாராவது இவ்வாறு பேசினால் அவர் பொறுத்துக்கொள்வாரா” என்றார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில், ‘‘ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணுக்கு எதிரான கமல்நாத்தின் பேச்சு ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிரானது, அவமானகரமானது, பொறுத்துக் கொள்ள முடியாதது. இதற்காக, டாப்ரா தொகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் ஒட்டுமொத்தமாக பகுஜன் சமாஜூக்கு வாக்களித்து காங்கிரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்’’ என கூறி உள்ளார்.

* சோனியாவுக்கு கடிதம்

மபி மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், சர்ச்சைக்குரிய கருத்து கூறிய கமல்நாத்தை கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கமல்நாத் சார்பாக கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, பாஜவின் இமர்தி தேவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: