முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்: தாயார் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை.!!!

சென்னை: முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி முதல்வரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல்நலக் குறைவு மற்றும் முதுகுவலி காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தவுசாயம்மாள் கடந்த 13-ம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 93. தொடர்ந்து, சென்னையில் இருந்து சேலம் சென்ற முதல்வர் பழனிசாமி, தாய் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் உறவினர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, சிலுவம்பாளையத்தில் உள்ள மையானத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இதற்கிடையே, தாயாரின் மறைவையொட்டி கடந்த ஒருவார காலமாக சேலம் இல்லத்தில் இருந்த முதல்வர் பழனிசாமி நேற்றிரவு சென்னை திரும்பினார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு அவரை நேரில் சந்தித்து திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் முதல்வரை சந்தித்த மு.க.ஸ்டாலின், இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மு.க.ஸ்டாலினுடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி ஆகியோரும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Related Stories: