125 டிகிரி வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 922 பேர் பலி : மெக்காவின் வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு

மெக்கா : “தமிழ்நாட்டிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டு உயிரிழந்த பீவி (73), மைத்தீன் பாத்து(73), நசீர் அஹமது(40), லியாக்கத் அலி (72) ஆகியோரின் உடல்களை சவூதியிலே அடக்கம் செய்ய அவர்களுடைய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்” என்று அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் அளித்துள்ளார். இஸ்லாமிய மக்கள் தங்கள் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். இந்தாண்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். சவுதியில் வழக்கத்தைவிட இந்தாண்டு அதிகளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள், குடைகளை பிடித்தபடி, தண்ணீர் அருந்தியபடி தங்கள் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். மெக்காவில் அல் ஹராம் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவியதாக கூறப்படுகிறது. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர். தற்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 922ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் எகிப்தை சேர்ந்தவர் 600 என்றும் இந்தியர்கள் 80 என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் வீதியெங்கும் சடலங்களாக கிடக்கிறது.

250 பேர் சுயநினைவு இன்றி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்கள் உடல்கள் மெக்காவுக்கு அருகில் உள்ள அல் – மொயிசம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. ஹஜ் புனித யாத்திரைக்கு முறைப்படி விசா எடுத்து வரும் மக்களுக்கு குளிர்சாதன வசதி உட்பட வேண்டிய வசதிகளை சவுதி அரசு செய்கிறது. அவ்வாறு பதிவு செய்யாத மக்கள் நீண்ட நேரம் வெயிலில் இருக்கும் காரணத்தாலும், உணவு, நீர், குளிர்சாதன வசதி மற்றும் முறையான தங்கும் வசதி இல்லாததாலும் அதிகம் பேர் பலியானதாக கூறப்படுகிறது.

The post 125 டிகிரி வெப்ப அலையால் ஹஜ் பயணிகள் 922 பேர் பலி : மெக்காவின் வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: