39 பேர் பலி… விஷச்சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்!!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோர் விஷச்சாராயம் குடித்தனர். அவர்களில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் 91 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் விஷச் சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை : விஷச் சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100-க்கும் மேற்பட்டோர் விஷச் சாராயம் குடிக்கும் அளவுக்கு விற்பனை நடந்திருப்பது காவல்துறைக்கு தெரியாமல் இருக்காது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்திருப்பது வரவேற்கத்தக்கது, இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். காவல்துறை விழிப்போடு இருக்க வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா : சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி இடமாற்றமோ, பணியிடை நீக்கமோ செய்தால் மட்டும் போதாது. அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் :தமிழ்நாடு முழுவதும் விஷச் சாராயம் விற்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.விஷச் சாராய விவகாரத்தில் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விசிக, சிந்தனைச் செல்வன் : விஷச் சாராயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஷச் சாராயம் விற்றவர் மட்டுமின்றி, அதனை தயாரித்தவர் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதையில்லா தமிழ்நாடு என்ற முதலமைச்சரின் உன்னத நோக்கத்திற்கு இடையூறாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post 39 பேர் பலி… விஷச்சாராய விற்பனையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Related Stories: