அதிகாரிகளிடம் வசூலிக்கப்படும் தாமதமாக அப்பீல் செய்யும் மாநிலங்களுக்கு அபராதம்: உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: அனுமதிக்கப்பட்ட நாட்களையும் தாண்டி தாமதமாக மேல்முறையீடு செய்யும் மாநில அரசுகளை கடுமையாக கண்டித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த தாமதத்துக்கு காரணமான அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநில அரசு சார்பில் ஒரு வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை தாண்டி 663 நாட்கள் தாமதமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தாமதமாக மனு தாக்கல் செய்த அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ‘‘அரசு இயந்திரமானது மிகவும் திறமையற்றதாகவும், சரியான நேரத்தில் வழக்கு செய்யவும்/மேல்முறையீடு செய்ய இயலாமலும் இருந்துவிட்டு, இப்பிரச்னையை தீர்க்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென கோருவது சரியான தீர்வாகாது. அதை ஏற்கவும் முடியாது. நீதிமன்றம் கூறிய பல்வேறு ஆலோசனைகள், உத்தரவுகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இருந்து விட்டு, அரசு அதிகாரிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை வீணாக்கி விட்டு, தாமதாக வந்து மேல்முறையீடு செய்தால் அதை நீதிமன்றம் அனுமதிக்காது. இதில் உறுதியான உத்தரவை பிறப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்.

சரியான காலத்திற்குள் மேல்முறையீடு செய்யாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தால், அதற்கான அபராதம் செலுத்தியே தீர வேண்டும், அதை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் இருந்தே வசூலிக்க வேண்டியிருக்கும்,’’ என்றனர். மேலும், மபி அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தாமதமாக மனு செய்ததால் ₹25,000 அபராதம் விதித்து, அதை தாமதம் செய்த அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட்டனர். 4 வாரத்தில் இந்த அபராத தொகையை செலுத்த வேண்டும். தவறினால், அம்மாநிலத்தின் தலைமை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: