ஆற்றூர் பேரூராட்சியில் ஒதுக்கப்பட்ட பொருட்களால் அழகு பெற்ற அலுவலகம்

குலசேகரம்: உலகில் அறிவியல் வளர்ச்சி மனிதனின் வாழ்கை முறையில் பெரிய மாற்றங்களை கொண்டு வருகிறது. இதனால் மண்ணுக்கும் இயற்கைக்கும் குந்தகம்  விளைவிக்கும் கழிவுகள் எல்லா இடங்களிலும் பரவி வருகிறது. இது எல்லா நிலையிலும் சூழியலை அழிவுக்கு கொண்டு செல்கிறது. இதிலிருந்து மக்கள் விழிப்படைய இயற்கையை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்  பொருட்கள் தடை செய்யப்பட்டதோடு தூய்மையை உறுதி செய்யும் வண்ணம் எல்லா இடங்களிலும் விழிப்புணர்வு விளம்பரங்களும் செய்யப்பட்டு வருகிறது. இதில் உள்ளாட்சி நிர்வாகங்களின் பணிகள் அனைவரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் ஆற்றூர் பேரூராட்சியின் செயல்பாடுகள் மக்களை கவர்ந்துள்ளது. பொது இடங்களில் சுகாதாரம், தூய்மைக்கு எடுத்துக்காட்டாக கல்வி நிலையங்கள், அரசு அலுவலகம் என நெருக்கடி மிகுந்து காணப்படும் ஆற்றூர் சந்திப்பில் சாலையோரத்தை தூய்மைபடுத்தி பெருநகரங்களை போல் பூங்கா அமைத்து அழகை பேணி வருகிறது.

இதேபோன்று பொதுமக்களால் பயன்படுத்தி விட்டு குப்பையாக வீசி எறியப்படும் குளிர்பான பாட்டில்கள், ஹெல்மெட்கள் போன்றவற்றை சேகரித்து அதற்கு வர்ணம் பூசி அழகுபடுத்தி அதில் அழகு செடிகளை நட்டு அலுவலக வளாக  பகுதியை அழகுபடுத்தியுள்ளனர். வீசி எறியப்படும் தண்ணீர் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் போன்று பயன்படுத்தியுள்ளனர். அலுவலக வளாகத்தில் ஒரு பகுதியில் சாக்கு பைகளில் மண்  நிரப்பி அதில் காய்கறி செடிகளை நட்டு வீட்டு தோட்டம் அமைத்துள்ளனர். அவைகள் பூத்து காய்த்துள்ளதை பார்த்து மக்கள் தங்கள் வீடுகளில் இருக்கிற இடங்களை இது போன்று பயனுள்ள முறையில் பயன்படுத்தும் வழிமுறைகளை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இது குறித்து ஆற்றூர் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஷ்வரன் கூறுகையில், விழிப்புணர்வு நம்மிடமிருந்து முதலில் துவங்க வேண்டும் அப்போதுதான் அது முழுமையடையும். பொதுமக்கள் எப்போதும் வந்து செல்லும் பேரூராட்சி அலுவலகத்தில் இது போன்று மாதிரி செயல்பாடுகள் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார்.a

Related Stories: