விரைவில் புதிய ரயில்வே அட்டவணை 600 மெயில், எக்ஸ்பிரஸ்கள் நீக்கம்: நாடு முழுவதும் 10,200 நிறுத்தங்கள் ரத்து

* 360 மெதுவான ரயில்கள் எக்ஸ்பிரசாகும்

* 120 மெயில்கள் சூப்பர் பாஸ்ட்டாக மாறும்

புதுடெல்லி: விரைவில் வெளியாக உள்ள பயணிகள் ரயிலுக்கான புதிய அட்டவணையில் 600 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நீக்கப்பட உள்ளன. இரவு நிறுத்தம் உள்பட 10,200 நிறுத்தங்களும் ரத்து செய்யப்பட உள்ளன.  ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே நிர்வாகம் பயணிகள் ரயில்களுக்கான புதிய அட்டவணையை வெளியிடுவது வழக்கம். அதன்படி, சில வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுவதும், சில நிறுத்தங்களில் கூடுதல் ரயில்கள் நின்று செல்வதும் அதிகரிக்கப்படும்.  இந்நிலையில், ரயில்வேயின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாகத் தலைவருமான வி.கே.யாதவ், டெல்லியில் நேற்று அளித்த பேட்டி வருமாறு: அடுத்த இரண்டு மாதங்களில் வெளியாக இருக்கும் பயணிகள் ரயிலுக்கான புதிய அட்டவணையில், தற்போது இயங்கி வரும் 600 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் நீக்கப்பட உள்ளன. இரவு நிறுத்தம் உள்பட, நாடு முழுவதும் 10,200 நிலையங்களில் ரயில்கள் நின்று செல்வது ரத்து செய்யப்படும்.

புதிய அட்டவணையின்படி, மெதுவாக அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லக் கூடிய 360 பாசஞ்சர் ரயில்கள், மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படும். 120 மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிவிரைவு ரயில்களாகவும் மேம்படுத்தப்பட உள்ளன. மும்பை ஐஐடி.யின் உதவியுடன் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் சரக்கு ரயில்களை இயக்கவும், பராமரிப்பு பணிகளை செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த புதிய அட்டவணையில் ரயில்கள் புறப்படும், சென்றடையும் நேரங்கள் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதனால், பயணிகள் அசாதாரண நேரத்தில் ஊர்களை சென்றடைவதும், வந்து சேருவதும் தவிர்க்கப்படும்.

கொரோனா தொற்று காரணமாக பயணிகள் ரயிலுக்கான புதிய அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. வழக்கமான சேவைகள் தொடங்கப்பட்ட பிறகே இந்த புதிய அட்டவணை செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

`லிங்க் எக்ஸ்பிரஸ்’ ரத்து

குறிப்பிட்ட சில வழித்தடங்களுக்கு செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை  இணைத்து முக்கிய சந்திப்புகளில் இருந்து, வேறு ரயில்களுடன் அந்த பெட்டிகளை  இணைக்கும் `லிங்க் எக்ஸ்பிரஸ்’ என்ற சேவையும் நீக்கப்பட உள்ளது. அதற்கு  பதிலாக, அந்த வழித்தடங்களுக்கு தனி ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Related Stories: