பெரியஇலை கிராமத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே பெரியஇலை கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே பெரியஇலை கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் அத்திவாசிய பொருட்கள் வாங்க, அலுவலகம் சார்ந்த உதவிகளை பெறவும், மாணவர்கள் மேல்நிலை கல்வி படிக்கவும் முதுகுளத்தூர் சென்று வருகின்றனர். முதுகுளத்துூர்-தேரிருவேலி சாலையிலிருந்து 3 கிமீ தொலைவில் கிராமம் இருப்பதால் கிராமமக்கள் நடந்து வந்து சாலை மார்க்கத்தில் நின்று பஸ் ஏறி செல்லும் நிலை உள்ளது.

ஆனால் இங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால், நிழற்குடை கட்டி தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து பஸ்ஸ்டாப்பில் கிராமமக்கள் தென்னைமர கிடுகுகள் மூலம் தற்காலிக நிழற்குடை அமைத்துள்ளனர். இது குறித்து பெரியஇலை கிராமமக்கள் கூறுகையில், தேரிருவேலி-முதுகுளத்தூர் சாலை மார்க்கத்தில் அடிக்கடி பஸ் வசதி கிடையாது. இதனால் காலம் தாழ்ந்து வரும் பஸ்சுக்காக கிராமமக்கள் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் அவலம் பல ஆண்டுகளாக தொடர்கிறது. நிழற்குடை கட்டி தர பலமுறை மக்கள் பிரதிநிதிகள்,

அரசு அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது காலையிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் பருவ மழை துவங்கி விட்டதால் திடீர், திடீரென மழை பெய்கிறது. இதனால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் நலன் கருதி தற்காலிக நிழற்குடை அமைத்துள்ளோம். இதுவும் தற்போது அடிக்கும் காற்றிற்கு 2 முறை சேதமடைந்து விட்டது. எனவே இங்கு நிரந்தரமான நிழற்குடை கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: