காவேரிப்பாக்கம் பகுதியில் பாதியில் நின்றுபோன நெடுஞ்சாலை பணிகள்: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

காவேரிப்பாக்கம்:  காவேரிப்பாக்கம் பகுதியில் நின்றுபோன நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை திட்டம் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. இந்த திட்டம் சில பகுதிகளில் ஆறு வழிச்சாலையாகவும், சில பகுதிகளில் நான்கு வழி சாலையாக காணப்படுகிறது.  தற்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா டோல்கேட் பகுதியில் இருந்தும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் வெள்ளைகேட் வரை தேசிய நெடுஞ்சாலையினர் ஆறு வழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நிலங்கள் கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆறு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் நிலங்கள் கையகப்படுத்தி, சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.   இப்பணிகள், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்னர் தொடங்கப்பட்ட பணிகள், தற்போது  பாதியில் நின்றுபோனது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே,  பணிகளை  விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: