வாலாஜாபாத் பேரூராட்சியில் 6 மாதமாக ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணி: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பகுதியில் சாலை அமைப்பதற்காக கடந்த 6 மாதத்துக்கு முன் கொட்டப்பட்டது. ஆனால், அந்த பணி இதுவரை முடியாமல் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால், நடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும், அடிக்கடி பழுதாகி வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். வாலாஜாபாத் பேரூராட்சி 5வது வார்டு வல்லப்பாக்கத்தில், 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் அனைத்தும் சேதமடைந்து  போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, இப்பகுதியில் தார்சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் 14வது நிதிக்குழு மானியத்தில் ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதைதொடர்ந்து, கடந்த 6 மாதங்களுக்கு முன், சாலைகளில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பணி துவங்கப்பட்டது. ஆனால் இதுவரை பணி முடியாமல், ஆமை வேகத்தில் நடக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் பேரூராட்சி வல்லப்பாக்கம் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தார்ச்சாலை அமைக்கும் கடந்த 6 மாதமாக பணி நடக்கிறது. இதற்காக, சாலைகள் முழுவதும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன.

இதனால் முதியவர்களும், சிறுவர்களும் சாலையில் நடந்து செல்ல முடியாமல், பாதங்களில் கற்கள் குத்தி காயமடைகின்றனர். வாகனங்களும் சாலையில் ஒத்தையடி பாதையில் செல்வது போல் சென்று வருகின்றன. ஆனாலும், கற்கள் குத்தி டயர்கள் பஞ்சர் ஆகின்றன. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக, அதிமுகவின் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர், சாலை அமைக்கும் பணியை ஒப்பந்தம் எடுத்துள்ளார்.

இதையொட்டி, அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணியை, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: