அன்னப்பன்பேட்டையில் கொள்முதல் செய்த நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்-நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சை: அன்னப்பன்பேட்டை நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருகிறது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் விவசாயிகள் 1,000 ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடி செய்திருந்தனர். கடந்த 15 நாட்களுக்கு முன் அனைத்து பகுதிகளிலும் அறுவடை செய்யப்பட்டு தற்போது சம்பா, தாளடி நடவுப்பணி துவங்கியுள்ளன.

இந்த கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை விற்பனை செய்வதற்காக அன்னப்பன்பேட்டை நேரடி கொள்முதல் நிலையம் முன்பு கொட்டி வைத்தனர். கடந்த 4ம் தேதி முதல் சுமார் 1,000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்த நிலையில் மீதமுள்ள நெல் மூட்டைகளை அப்படியே கிடப்பில் வைத்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தஞ்சை பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் கொள்முதல் நிலையத்தின் முன்புறம் கொட்டி வைத்துள்ள நெல்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. இதேபோல் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பின்றி அடுக்கி வைத்திருப்பதால் மழையில் நனைந்து நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே அன்னப்பன்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பில்லாமல் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க படுதாவை போட்டு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி சீனிவாசன் கூறுகையில், கடந்த ஜூன் மாதம் நடவு செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் குறுவை அறுவடை நடந்தது. தற்போது மழை பெய்து வருவதால் நெல்மணிகள் ஈரமாகி விட்டது. கொள்முதல் நிலையம் திறப்பதற்குள் மழை பெய்ததால் பெரும்பாலான நெல்மணிகளில் நாற்றுகள் முளைத்து பதரானது. மீதமுள்ள நெல் மூட்டைகளை காயவைத்து உலர்த்தி எடுத்து வந்தால் ஈரப்பதமாக உள்ளதாக கூறி கொள்முதல் நிலைய அலுவலர்கள் திருப்பி அனுப்பினர். இதைதொடர்ந்து நெல்மணிகளை காயவைத்து 20 சதவீதம் ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்யப்பட்டது.

அன்னப்பன்பேட்டை நேரடி கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பின்றி திறந்த நிலையில் வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்ததால் நெல் மூட்டைகள் நனைந்து விட்டன. இந்த நெல் மூட்டைகளை உடனடியாக காய வைக்காவிட்டால் நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைத்து விடும்.

இதனால் கொள்முதல் செய்யப்பட்ட 1,000 நெல் மூட்டைகளின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. எனவே அனைத்து கொள்முதல் நிலையத்திலும் நெல் மூட்டைகளை பாதுகாக்க உரிய இடத்தை அமைக்க வேண்டும் அல்லது கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் கிடங்குக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

Related Stories: