அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளிடமே சுரண்டுவதா? கிசான் திட்ட மோசடியில் எத்தனை பேர் மீது வழக்கு?... மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

மதுரை: உழவன் ஒட்டிய வயிறுடன் உழைத்து உருவாக்கிய பொருட்களுக்கு உரிய விலையில்லை, உணவளிக்கும் விவசாயிகளிடமே சுரண்டுவது ஆரோக்கியமானதல்ல என கருத்து தெரிவித்த நீதிபதிகள், கிசான் மோசடி தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். திண்டுக்கலைச் சேர்ந்த சிவபெருமாள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா உதவி விவசாய அலுவலகம் மூலம் நல்லமன்னார்கோட்டை பகுதியில் விவசாயிகள் அல்லாத பலருக்கு கிசான் திட்டத்தின் கீழ் முறைகேடாக வங்கிக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

வேடசந்தூர் உதவி விவசாய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள்  என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘அனைவருக்கும் உணவளிக்கும் விவசாயிகளிடமே சுரண்டுவது ஆரோக்கியமானதல்ல. விவசாயி ஒட்டிய, காய்ந்த வயிறுடன் நாள் முழுவதும் உழைத்து கிடைக்கும் விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை என்றனர். பின்னர், ‘‘மத்திய, மாநில அரசுகளின் சார்பில் விவசாயிகளுக்காக என்னென்ன திட்டங்கள் உள்ளன?

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டுள்ளன? கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளுக்கான திட்ட மோசடி தொடர்பாக எத்தனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகளின் வேளாண்மை துறை செயலர்கள், தமிழக டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக். 15க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: