மத்திய அமைச்சரவை ஒப்புதல்: ஆபத்து விளைவிக்கும் 7 ரசாயனத்துக்கு தடை

புதுடெல்லி: ஆபத்தை விளைவிக்கும் 7 பூச்சிக்கொல்லி ரசாயனங்களுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, கூட்டம் முடிந்ததும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர், ‘‘ஸ்டால்க்ஹோம் மாநாட்டில் 7 ஆபத்தான ரசாயனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த  அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 ரசாயனங்களும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என்பதால் தடை விதிக்கப்பட்டவை. சுற்றுச்சூழல் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான சர்வதேச எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில் இந்தியாவுக்கு உள்ள உறுதியை காட்டுகிறது,’’ என்றார்.தடை செய்யப்பட்டுள்ள 7 பூச்சிக்கொல்லி ரசாயனங்களை பயன்படுத்துவதால், கேன்சர், உறுப்புகள் செயலிழப்பு, நீண்ட கால சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல, இயற்கை எரிவாயு சந்தைபடுத்துதல் சீர்த்திருத்தத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜப்பானுடன் சைபர் பாதுகாப்பு ஒப்பந்தம்

இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கிடையே சைபர் பாதுகாப்பு குறித்த கூட்டுறவுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. சைபர் பாதுகாப்புத் துறையில் திறன் மேம்படுத்துதல், முக்கிய உள்கட்டமைப்புகளை பாதுகாத்தல், வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் ஒத்துழைப்பு, இணைய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் அச்சுறுத்தல் மற்றும் இணைய வழிக் குற்றங்களை தடுப்பதற்கான வழி முறைகள், தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான கூட்டு முயற்சிகள் ஆகியவற்றை இரு நாடுகளும் பரஸ்பர விருப்பத்திற்கேற்ப மேம்படுத்த இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

Related Stories: