நாடு முழுவதும் எம்பி, எம்.எல்.ஏக்கள் மீது 4,859 வழக்குகள் நிலுவை: உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி அறிக்கை

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள எம்பி, எம்.எல்.ஏக்கள் மீது 4,859 வழக்குகள் நிலையில் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிரிமினல் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஒருசில வழிகாட்டுதல்களை வழங்கியது. இந்நிலையில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய மனுவில்,”நாடு முழுவதும் உள்ள சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகள் அனைத்தையும் ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை நியமித்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டது.

வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,”நாடு முழுவதும் எம்பி, எம்.எல்.ஏக்கள் மீது மொத்தம் 4,859 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் 1,374 வழக்குகள் உள்ளது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த உள்ளது. தமிழக எம்பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது சுமார் 361 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: