ஏலத்தில் 38.54 கோடிக்கு மட்டுமே வாங்கப்பட்ட விராட் விமானம் தாங்கி கப்பலை 100 கோடிக்கு விற்பதற்கு பேரம்: அருங்காட்சியகமாக மாற்ற மும்பை நிறுவனம் திட்டம்

அகமதாபாத், : ஏலத்தில் ரூ.38.54 கோடிக்கு மட்டுமே  விற்கப்பட்ட ‘ஐஎன்எஸ் விராட்’ விமானம் தாங்கி போர்க்கப்பலை, தற்போது  ரூ.100 கோடிக்கு  வாங்குவதற்கு மும்பை நிறுவனம் முயற்சித்து வருகிறது.இந்திய கடற்படையில் கம்பீரமாக வலம் வந்த ‘ஐஎன்எஸ்  விராட்‘ விமானம் தாங்கி போர்க்கப்பல், கடற்படையில் கடந்த 1987ம் ஆண்டு   சேர்க்கப்பட்டது. 30 ஆண்டு கால சேவைக்கு பிறகு, 2017ம் ஆண்டு மார்ச்சில் கடற்படையில்  இருந்து விடுவிக்கப்பட்டது.   இதை அருங்காட்சியகம்  அல்லது வேறு காரணங்களுக்காக பயன்படுத்துவதற்காக  எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும்  தோல்வி அடைந்தன. இதனால்,கடந்த  ஜூலையில்  இக்கப்பலை உடைப்பதற்காக ஏலம் விடப்பட்டது. இதில், ‘ராம்  க்ரீன் ஷிஎப்’  என்ற நிறுவனம் ரூ.38.54கோடிக்கு  ஏலம் எடுத்தது. பின்னர், குஜராத் மாநிலம், அலாங்கில் உள்ள கப்பல் உடைப்பு தளத்திற்கு கடந்த  வாரம் ஐஎன்எஸ் விராட் இழுத்து வரப்பட்டது..  

இது தொடர்பாக ராம் கிரீன்  நிறுவனத்தின் தலைவர் முகேஷ் படேல் கூறுகையில், “மும்பையை  சேர்ந்த நிறுவனம் ஒன்று இக்கப்பலை   அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு  திட்டமிட்டுள்ளது. அதற்கு, கப்பலை ரூ.100 கோடிக்கு விற்பனை செய்வதற்கு  ஒப்புக் கொண்டேன். அவர்களுக்கு  ஒரு வாரம் மட்டுமே அவகாசம் கொடுத்துள்ளேன்.  அதற்குள் வாங்கா விட்டால், உடைக்கும் பணியை தொடங்கி விடுவேன்,” என்றார். கப்பலை வாங்க முயற்சிக்கும் ‘என்விடெக் மெரைன் கன்சல்டன்ஸ்  பிரைவேட் லிமிடெட்,’ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விகே சர்மா,  கூறுகையில், “கப்பலை வாங்குவதற்காக பாதுகாப்பு அமைச்சகத்திடம் தடையில்லா சான்று பெற முயற்சித்து  வருகிறோம். அதை பெற்றால்தான்,  கப்பலை எங்களால்வாங்க முடியும்,” என்றார்.

உடையுமா? தப்புமா?

கடற்படையில்  ஏற்கனவே இருந்த, ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ விமானத் தாங்கி போர்க்கப்பல் கடந்த 2014ம் ஆண்டு  மும்பையில் உடைக்கப்பட்டது.  தற்போது, 2வது விமானத்  தாங்கி கப்பலான ‘ஐஎன்எஸ் விராட்’டும் உடைக்கப்படுவதற்காக காத்திருக்கிறது. அது, உடைக்கப்படுமா? அல்லது  அருங்காட்சியகமாக மாறுமா? என்பது விரைவில் தெரியும்.

Related Stories: