லைப் மிஷன் திட்ட முறைகேடு சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: ‘லைப் மிஷன் முறைகேடுகள் பற்றி சிபிஐ விசாரணை நடத்த தடை விதிக்க முடியாது,’ என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கேரள  மாநிலம், வடக்கஞ்சேரியில் ஏழைகளுக்கு வீடுகட்டி கொடுக்கும் ‘லைப் மிஷன்’  திட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ‘யூனிடெக்’ என்ற  தனியார்  நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது. இந்த திட்டத்துக்கு துபாயை சேர்ந்த தன்னார்வ  தொண்டு நிறுவனமான ‘ரெட் கிரசண்ட்’ ₹20 கோடி  வழங்கியது. இந்த  திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, சிபிஐ  விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில்  முதல் நபராக யூனிடெக் நிர்வாக  இயக்குனர் சந்தோஷ் ஈபன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு கேரள அரசுக்கு  கடும் நெருக்கடியை ஏற்படுத்தி  வருகிறது.

இந்நிலையில், ‘லைப் மிஷன்’ திட்ட முறைகேடுகளில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி, ேகரள அரசு சார்பில்  உயர் நீதிமன்றத்தில்  மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அருண்  முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வடக்காஞ்சேரி  அடுக்குமாடி கட்டும்  பணியில் வெளிநாட்டு நிதி கட்டுப்பாட்டு சட்டத்தில்  எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை என அரசு வக்கீல் தெரிவித்தார். ஆனால்,  சிபிஐ தரப்பு  வக்கீல் கூறுகையில், சில நிறுவனங்கள் மூலம் பணத்தை பெற்று,  வெளிநாட்டு நிதி கட்டுப்பாட்டு சட்டம் மீறப்பட்டுள்ளது. அமீரக தூதரகத்துடன்   இதற்காகத்தான் ‘யூனிடாக்’ நிறுவனம் ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது என்றார். இதையடுத்து,  சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிபதி அருண், வழக்கை ஒருவாரத்துக்கு ஒத்தி வைத்தார். இது கேரள  அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: