தொற்று பாதிப்பால் வீட்டு தனிமையில் இருந்தபோது விபரீதம் கொரோனா பற்றிய கவலை இல்லாமல் தொழிலதிபர் குடும்பத்தை கட்டிபோட்டு 250 சவரன் நகைகொள்ளை

* செல்போன், சொகுசு கார் எடுத்து சென்றனர்

* வைரஸ் எச்சரிக்கையுடன் போலீஸ் விசாரணை

* முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை

சென்னை: கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருந்த தொழிலதிபர் குடும்பத்தை, முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தி முனையில் அனைவரையும் கயிறால் கட்டி போட்டு, 250 சவரன் நகை, ரூ.1 லட்சம் பணம், சொகுசு காரை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தி.நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகர் சாரதம்பாள் தெருவை சேர்ந்தவர் நூரூல் யாகூப்(70) .தொழிலதிபரான இவர், தனது மனைவி ஹனிஷா உட்பட 4 பேருடன் வசித்து வருகிறார். நூரூல் யாகூப் அவரது மனைவி உட்பட நான்கு பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் 4 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டனர். கொரோனா பாதிப்பால் தொழிலதிபர் வீட்டிற்கு யாரும் வருவதில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நூரூல் யாகூப் அவரது குடும்பத்துடன் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கத்தி முனையில் நூரூல் யாகூப் மற்றும் அவரது மனைவி ஹனிஷா உட்பட 4 பேரை கயிறால் கட்டி போட்டுவிட்டு சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். பிறகு பீரோவில் வைத்திருந்த 250 சவரன் தங்க நகைகள், ரூ.95 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். மேலும், கொள்ளை சம்பவம் குறித்து உடனே போலீசாருக்கு சொல்லாதபடி அவர்களை வைத்திருந்த செல்போன்கள் மற்றும் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த சொகுசு காரையும் கொள்ளையடித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிவிட்டனர்.

பிறகு வெகு நேரத்திற்கு பின் கட்டப்பட்ட கயிறை அவிழ்த்து கொண்டு சம்பவம் குறித்து பாண்டி பஜார் போலீசாருக்கு நூரூல் யாகூப் தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார் உரிய பாதுகாப்புடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் கொரோனா என்பதால் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டிற்குள் செல்லாமல் நூரூல் யாகூப்பிடம் முறைப்படி புகார் பெற்றனர்.அந்த புகாரில், நூரூல் யாகூப் வீட்டில் அவரது உறவினர் மொய்தீன் என்பவர் தங்கியிருந்ததாகவும் அவர் மீது தான் சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதைதொடர்ந்து போலீசார் மொய்தீன் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

அதேநேரம், வேறு யாராவது திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளார்களா என்ற கோணத்தில் வீட்டில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், 2 தனிப்படைகள் அமைத்து முகமூடி கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கொரோனா தொற்றால் தனிமையில் இருந்தவர்கள் வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் நகை, பணம், கார் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தி.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீ ட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் கொரோனா என்பதால் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டிற்குள் செல்லாமல் முறைப்படி புகார் பெற்றனர்.

Related Stories: