தர்மபுரி அருகே பரபரப்பு: போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை: 30 ஆண்டுகளாக பணி புரிந்தது அம்பலம்

பாலக்கோடு: தர்மபுரி அருகே, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியை, 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது. அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகே, திம்மராயன அள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் வள்ளியம்மாள்(50). இவர் கடந்த 1988ம் ஆண்டு, பிளஸ் 2 முடித்ததாக போலி சான்றிதழ் கொடுத்து, ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் போது, தலைமை ஆசிரியை வள்ளியம்மாள் பணியில் சேரும் போது கொடுத்த சான்றிதழ்கள், போலியானது என தெரியவந்தது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உத்தரவின் பேரில், காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் உமாதேவி, தலைமையாசிரியர் வள்ளியம்மாள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மகேந்திரமங்கலம் போலீசில் புகார் மனு  கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த வள்ளியம்மாள் தலைமறைவாகி விட்டார். இது குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வள்ளியம்மாளை தேடி வருகின்றனர்.   மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ‘போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை வள்ளியம்மாள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து இடைநீக்கம் செய்யப்படும்’ என்றார். போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த தலைமை ஆசிரியை கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

Related Stories:

>