கோபி, சுற்றுப்புற பகுதிகளில் கனமழை; சாலையின் குறுக்கே மின்கம்பம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு: 20 கிராமங்கள் இருளில் மூழ்கியது

கோபி: கோபி பகுதியில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 20 கிராமங்கள் இருளில் மூழ்கியது. ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. நம்பியூர், மூணாம்பள்ளி, குருமந்தூர், எலத்தூர், செட்டிபாளையம், கடத்தூர், ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதியில் வீசிய சூறாவளி காற்றுக்கு பல இடங்களில் 50 ஆண்டு பழமையான மரங்கள் முறிந்து விழுந்தன.

மேலும் எலத்தூர்குளம் அருகே காய்ந்த மரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. செட்டிபாளையத்தில் இருந்து எலத்தூர் செல்லும் சாலையில் குளத்தின் கரையில் இருந்த பெரிய மரம் முறிந்து, மின்கம்பியின் மீது விழுந்ததில் மின்கம்பம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. செட்டிபாளையத்தில் இருந்து நம்பியூர் செல்லும் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. இதேபோல மூணாம்பள்ளியில் இருந்து செட்டிபாளையம் சாலையில் கீழ்பவானி வாய்க்கால் அருகே மரங்கள் முறிந்து விழுந்ததால், அப்பகுதியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Related Stories:

>