ஆந்திரா,கர்நாடகாவை கலக்கிய கொள்ளை கும்பல் கைது ; பட்டதாரிகள், மாணவர்கள் உட்பட 21 பேர் பிடிபட்டனர்!!

திருமலை : கர்நாடகாவில் மதுபான ஆலை அதிபர் வீட்டில் ₹150 கோடி கொள்ளையடித்த பட்டதாரிகள், மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த காரை நிறுத்தி அதில் இருந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர்களின் காரை சோதனையிட்டனர்.

சோதனையில், ஒரு துப்பாக்கி, 4 தோட்டாக்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், 6 பேரிடம் தீவிரமாக விசாரித்தனர். கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் பண்ணை வீடுகள் மற்றும் பங்களாக்களில் கொள்ளையில் ஈடுபட்டு வரும் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஒரு மதுபான தொழிற்சாலை அதிபரின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் ₹150 கோடியை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இந்த கொள்ளை கும்பல் தனித்தனி குழுக்களாக பிரிந்து, பண்ணை வீட்டின் புகைப்படங்களை சேகரிப்பது, வீட்டின் உரிமையாளர் விவரங்களை சேகரிப்பது, வீடுகளில் எத்தனை காவலாளிகள் உள்ளனர் என விவரங்களை சேகரிப்பது என தனித்தனியாக செயல்பட்டு திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் அளித்த தகவலின்பேரில் ஆங்காங்கே மறைந்திருந்த மேலும் 15 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பதியில் 2 இடங்களிலும், நெல்லூரில் 2 இடங்களிலும் கொள்ளையில் ஈடுபட்டதும், 21 பேரில் 5க்கும் மேற்பட்டவர்கள் பட்டதாரிகள், சிலர் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என்பதும், வேலை இல்லாததால் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதும் தெரிய வந்தது.இதுகுறித்து கடப்பா எஸ்பி அன்புராஜன் கூறுகையில், கொள்ளையர்கள் பெரிய நெட்வொர்க்கை அமைத்து வசதியானவர்களின் வீடுகளில் கொள்ளையடித்து வந்துள்ளனர்.

கொள்ளையடிக்கும் வீட்டின் முன் சிலர் பாதுகாப்பாக நின்று கொண்டு இருப்பார்கள். மற்றவர்கள் உள்ளே சென்று காவலாளிகள் மீது மயக்க மருந்து தெளித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடித்துள்ளனர். கைதானவர்களில் முக்கிய குற்றவாளியான கிரண், 2 ஆண்டுகளுக்கு முன் மும்பையில் பணியாற்றியபோது ஒரு துப்பாக்கி வாங்கி வந்துள்ளார். பல வீடுகளில் அந்த துப்பாக்கியை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றார்.

Related Stories:

>