ஜம்மு எல்லையில் நள்ளிரவில் ஊடுருவிய தீவிரவாதிகளை விரட்டியடித்தது ராணுவம்

ஜம்மு: பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளை ராணுவம் விரட்டியடித்தது. ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்குள் பனிக்காலத்துக்கு முன்பாக அதிகளவில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய, பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. தற்போது, எல்லையில் இந்திய ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பும் போர் தந்திரத்தில் சீனாவும் இறங்கியுள்ளது. இதற்காக, அதிகளவில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும்படி பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஜம்மு எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்ற 5 தீவிரவாதிகளின் முயற்சியை ராணுவம் முறியடித்துள்ளது.

இது பற்றி எல்லை பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் நேற்று கூறுகையில், ‘‘‘ஜம்முவில் உள்ள சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு உள்ளது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு, பாகிஸ்தானில் இருந்து 5 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இதைக் கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானிய ராணுவ வீரர்களும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். 30 நிமிடங்கள் நடந்த இந்த சண்டையில், இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 5 தீவிரவாதிகளும் தப்பிச் சென்றனர்,’’ என்றார்.

Related Stories: