தூத்துக்குடி விஐபியை கொல்ல சதி: தனித்தனி வாகனங்களில் வந்த 40 பேர் கும்பல்? பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் சிக்கினர் - பரபரப்பு தகவல்

ஏரல்: திருச்செந்தூரில் பிரபல விஐபியை கொல்ல சதி திட்டத்துடன் வந்த 6 பேரை போலீசார் மடக்கினர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தனித்தனி வாகனங்களில் 40 பேர் வந்ததாக வெளியான தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் 17ம் ஆண்டு நினைவு தினம், வருகிற 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கால், இந்தாண்டு நினைவு தின ஊர்வலத்துக்கு அனுமதியில்லை என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து அம்மன்புரத்துக்கு யாரும் வர வேண்டாமென வெங்கடேஷ் பண்ணையார் நற்பணி இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சாயர்புரம் அருகே, வைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லோடு ஆட்டோ மற்றும் பைக்குகளில் வந்த 6 பேரை சந்தேகத்தின்பேரில் மடக்கினர். விசாரணையில் அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், வாகனங்களில் சோதனையிட்டனர். அப்போது அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 6 பேரையும் போலீசார், சாயர்புரம் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விஐபியை படுகொலை செய்ய வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருச்செந்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க சம்பந்தப்பட்ட விஐபி வருவார் என எதிர்பார்த்து இக்கும்பல் வந்ததும், அதற்காக இவர்கள் மட்டுமின்றி சுமார் 40 பேர் தனித்தனி குழுக்களாக வாகனங்களில் வந்ததும் தெரிய வந்தது. ஒரு குழுவிடம் அந்த விஐபி தப்பினாலும், அடுத்த குழுவினர் அவரை தீர்த்துக் கட்டுவது என சதி திட்டம் தீட்டி பல இடங்களில் ஆயுதங்கள் மற்றும் வாகனங்களில் காத்திருந்துள்ளனர். இதனிடையே ஒரு கும்பல் பிடிபட்டதால், மற்ற அனைவரும் தப்பியோடி விட்டனர். இதையடுத்து அவர்கள் யார், யார் என்பது குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதில்  பிடிபட்டவர்கள் தூத்துக்குடி மாவட்டம் பக்கப்பட்டியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் 40 பேர் கும்பலில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம், சீவலப்பேரி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இருந்துள்ளனர். தப்பியோடிய மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

10 லட்சம் பரிசா?

தூத்துக்குடி விஐபியை கொலை செய்து அவரது தலையை எடுத்து, தூத்துக்குடியில் உள்ள சமுதாய தலைவரின் நினைவிடத்தில் வைப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு என தனித்தனி குழுக்களாக வந்தவர்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இம்முறை அவரை எப்படியாவது தீர்த்துக் கட்டி விட வேண்டுமென அவர்கள், ஆங்காங்கே காத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories: