டெல்லி கலவர வழக்கில் பேஸ்புக் நிர்வாகி ஆஜராக கட்டாயப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘டெல்லி கலவரம் தொடர்பாக பேஸ்புக் நிர்வாகி ஆஜராக டெல்லி சட்டப்பேரவை குழு அனுப்பிய சம்மன் மீது அக்டோபர் 15ம் தேதி வரை எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது,’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் வெளியான கட்டுரையில், வெறுப்பு பேச்சுகளை நீக்கும் தனது விதிமுறைகளை இந்தியாவில் பேஸ்புக் நிறுவனம் முறையாக பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வெறுப்புணர்வை தூண்டும் சில பேச்சுக்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கவில்லை என்றும் இதுதான் டெல்லியில் தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கலவரத்திற்கு காரணம் என்றும் புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக பேஸ்புக் துணைத்தலைவரும், நிர்வாக இயக்குநருமான அஜித் மோகன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க டெல்லி சட்டப்பேரவையால் நியமிக்கப்பட்ட குழு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த 10 மற்றும் 18ம் தேதிகளில் இக்குழு இரு நோட்டீஸ் அனுப்பியும் பேஸ்புக் நிர்வாகி ஆஜராகவில்லை. இந்த சம்மனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேஸ்புக் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ஹரிஸ் சால்வே, ‘‘சட்டப்பேரவை உத்தரவை மீறியதாக பேரவையால் அமைக்கப்பட்ட குழு தீர்மானிக்க முடியாது.

அதோடு சமூக ஊடக நிர்வாகங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை. எனவே டெல்லி சட்டப்பேரவை குழு தனது அதிகாரத்தை மீறி இதில் செயல்பட்டுள்ளது. கட்டாய நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், வரும் அக்டோபர் 15ம் தேதி வரை பேஸ்புக் நிர்வாகி மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்க தடை விதித்தனர். மேலும், மனு தொடர்பாக சட்டப்பேரவை குழுவின் செயலாளர், சட்ட, நீதி, உள்துறை விவகாரம், தகவல் தொழில்நுட்பம், நாடாளுமன்ற அமைச்சகங்கள், டெல்லி போலீசார் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.

Related Stories: