மதுராந்தகம் காவல் உட்கோட்டத்தில் டிஎஸ்பி உட்பட 3 பேருக்கு கொரோனா

மதுராந்தகம்: மதுராந்தகம் காவல் உட்கோட்ட டிஎஸ்பி மற்றும் 2 போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக சற்று குறைந்து வருகிறது. இதையொட்டி, தமிழக அரசு ஊரடங்கில் தளர்வு அறிவித்தது. இதற்கிடையில், தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த சுகாதார துறையுடன் இணைந்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், காவல் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுராந்தகம் உட்கோட்ட காவல்துறை டிஎஸ்பி அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், டிஎஸ்பி அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், டிஎஸ்பி மகேந்திரன் (52), போலீஸ்காரர்கள் ராஜாமணி (55), ரமேஷ் (40) ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து 3 பேரும், தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். மேலும், டிஎஸ்பி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் ரிசார்ட் அமைந்துள்ளது. இங்கு, வடமாநிலத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில், சதுரங்கப்பட்டினம் மருத்துவ குழுவினர் மற்றும் மாமல்லபுரம் பேரூராட்சி இணைந்து, கடந்த சில நாட்களுக்கு முன் ரிசார்ட் ஊழியர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்தது. அதில், 10 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, ஊழியர்கள் 10 பேர், கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், பேரூராட்சி ஊழியர்கள் அந்த ரிசார்ட்டில், கிருமி நாசினி தெளித்து, தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பலகை வைத்தனர்.

Related Stories: