பட்டிவீரன்பட்டியில் 500 ஆண்டுகள் பழமையான முத்தாலம்மன் கோயில் திருவிழா இந்த ஆண்டு நடக்குமா?...7 ஊர் மக்கள் எதிர்பார்ப்பு

பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டியில் சுமார் 500 ஆண்டுகளாக நடக்கும் முத்தாலம்மன் கோயில் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுமா என 7 ஊர் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சின்ன அய்யம்பாளையம், பெரிய அய்யம்பாளையம், சித்தரேவு, நெல்லூர் ஆகிய 7 ஊர்களில் முத்தாலம்மன் கோயில்கள் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் 3 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக தொன்று தொட்டு நடக்கும் இத்திருவிழாவிற்காக 15 நாட்களுக்கு முன்பு சாமி சாட்டுதல், காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். சாமி சாட்டுதல் நடந்த நாளிலிருந்து பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் துவங்குவர்.

கிடா வெட்டுதல், வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல், மேளதாளம், வாணவேடிக்கை, கும்மி அடித்தல் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் என இப்பகுதியே திருவிழாவின்போது களைகட்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இத்திருவிழா நிகழ்வுகளை கண்டு ரசிப்பர். இவ்வாறு பாரம்பரியாக நடந்து வரும் முத்தாலம்மன் கோயில் திருவிழா இந்தாண்டு அதற்கான முன்னேற்பாடு துவங்காததாலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் நடைபெறுமா என சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்து. எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை களைந்து பாரம்பரியாக நடக்கும் இத்திருவிழா நடைபெற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: