மேகதாது அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் : டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தல்!!!

டெல்லி:  மேகதாது அணைக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா வலியுறுத்தி இருக்கிறார். காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், அணையை உடனடியாக கட்ட வேண்டுமென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து எடியூரப்பா பேசியுள்ளார். பின்னர், நீர் வளத்துறை அமைச்சரையும் சந்தித்து பேசியுள்ளார். கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரையில் காவிரியின் குறுக்கே ராம் நகர் என்ற பகுதியில் உள்ள மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கான ஒரு முடிவை கர்நாடக அரசு பல ஆண்டுகளாக எடுத்திருக்கிறது. அதே சமயத்தில் தமிழக அரசை பொறுத்தவரையில், காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையை கட்டினால் மிகுந்த பாதிப்பு ஏற்படும்.

 ஏற்கனவே கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு ஆண்டுதோறும் தரவேண்டிய தண்ணீரின் அளவானது குறைந்தே உள்ளது. இந்த நிலையில் அங்கு அணையை கட்டினால் நமக்கு தண்ணீரானது முழுமையாக கிடைக்காமல் இருந்துவிடும் என கூறியுள்ளது. மேலும், விவசாயம் இதனால் பெருமளவு பாதிக்கப்படும். எனவே மேகதாது அணையை கட்ட தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இதுதொடர்பான வழக்கு ஒன்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட திட்டமிட்டுள்ள மேகதாது அணை திட்டத்திற்கு ஏற்கனவே மத்திய நீர் வள அமைச்சகத்தின் ஒப்புதலை கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால் இதுவரை அந்த ஒப்புதலானது அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசியுள்ளார். அப்போது மேகதாது அணைக்கு உடனடி அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். இதற்கிடையில் 2 தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் தி.மு.க., தலைவர் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளின் நலனை காக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என வினவினார். அதற்கு பதிலளித்த தமிழக முதலவர் பழனிசாமி மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட நாங்கள் ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என உறுதி அளித்துள்ளார். இந்த நிலையில்தான், தற்போது பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணை கட்ட அனுமதி வழங்க வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: