மோடி 70வது பிறந்த நாள் விழா: நாடு முழுவதும் பாஜ.வினர் உற்சாக கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் விழா நேற்று நாடு  முழுவதும் பாஜ.வினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் பல்வேறு உலகத் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முதல்வர்கள்,  அமைச்சர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். நாடு முழுவது் பாஜ  சார்பில் அவருடைய பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும், கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு அவருடைய பிறந்த நாள்,  சேவை வாரமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாட்டின் பல்வேறு  பகுதிகளிலும் தூய்மை பணிகளை மேற்கொள்ளுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல்  உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது  டிவிட்டர் பதிவில், ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் மோடிஜி. இந்திய வாழ்வியல்  மற்றும் ஜனநாயக பாரம்பரியத்துக்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு. உங்களை  ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் வைத்திருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.  உங்களின் விலைமதிப்பற்ற சேவைகளை இந்த நாடு தொடர்ந்து பெறுவதற்கு எனது  வாழ்த்துக்கள்,’ என குறிப்பிட்டுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும், ‘உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். இந்த  தருணத்தில் நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்காக நீங்கள்  மேற்கொண்ட கடின உழைப்பை பாராட்டுகிறேன்.

உங்களின் சக்தி வாய்ந்த  தலைமையின் கீழ் பல்வேறு சவால்கள் திறம்பட தீர்க்கப்பட்டுள்ளது  மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்,’ என தெரிவித்துள்ளார்.  நாள்தோறும் மத்திய  அரசின் நடவடிக்கையை விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘பிரதமர் மோடிக்கு பிறந்த நாள்  வாழ்த்துக்கள், அவர் சிறந்த ஆரோக்கியம், மகிழ்ச்சியுடன் இருக்க  வாழ்த்துகிறேன்,’ என கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடின் உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும்,  மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உட்பட பலரும் மோடிக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: