10 கடைகள் மட்டுமே செயல்படுகின்றன: வியாபாரம் இன்றி தள்ளாடும் டவுன் காய்கறி மார்க்கெட்

நெல்லை: நெல்லை கல்வித்துறை அலுவலகம் அருகே மாநகராட்சி சார்பில் புதியதாக திறக்கப்பட்ட காய்கறி மார்க்கெட்டில் கடைகள் வெறிச்சோடி கிடக்கின்றன. 10 கடைகள் மட்டுமே செயல்படுவதால் வியாபாரிகள் விற்பனையின்றி தவிக்கின்றனர். நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயில் அருகே செயல்பட்டு வந்த சுபாஷ்சந்திர போஸ் மார்க்கெட் இரு மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக இடிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள வியாபாரிகள் நெல்ைல பொருட்காட்சி மைதானத்திற்கு கடைகளை மாற்றியமைக்க கேட்டு கொள்ளப்பட்டது. அங்கும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வர்த்தக மையம் அமைக்கும் பணிகள் தொடங்கியதால், டவுன் மாவட்ட கல்வி அலுவலகம் அருகேயுள்ள காலியிடத்தில் புதிய மார்க்கெட் கட்டி கொடுக்கப்பட்டு, அங்கு கடைகள் செயல்பட மாநகராட்சி அனுமதித்தனர்.

புதிய மார்க்கெட்டில் 200 கடைகள் உள்ள நிலையில், சுமார் 10 கடைகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள கடைகள் பொருட்காட்சி மைதானத்தில் ஓரப்பகுதியில் இயங்கி வருகின்றன. மேலும் வியாபாரம் கருதி வியாபாரிகள் பலர் தற்போது ரதவீதிகளிலும், டவுன் போஸ் மார்க்கெட்டின் வெளிப்பகுதிகளிலும் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இதனால் புதிய மார்க்கெட்டிற்கு விற்பனை படுமந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். நெல்லை டவுனில் காய்கறி விற்பனையை அதிகரிக்க அனைத்து கடைகளையும் ஒரே இடத்தில் செயல்பட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Related Stories: