உரம் முறைகேடு தொடர்பாக வெள்ளை அறிக்கை கோரி கோவில்பட்டியில் காங். நிர்வாகி நூதன போராட்டம்

கோவில்பட்டி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வழக்கறிஞர் பி.அய்யலுசாமி காவடி சுமந்து, அதில் யூரியா, டி.ஏ.பி. ஆகியவற்றை மாட்டிக்கொண்டு யூரியா உரம் ஊழல் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், சிபிஐ விசாரணை கோரியும்  கோஷங்கள் முழங்கியவாறு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர் கோட்டாட்சியர் விஜயாவிடம் அளித்த மனு: ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கும் முன்பே யூரியா 5 கிலோ எடை குறைவாக உள்ளது என மனு வழங்கினேன்.

சில சமூக விரோதிகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உரம் பதுக்கலில் ஈடுபடுகின்றனர் என 3 முறை மனு வழங்கினேன். இதற்கு பதில் அளித்துள்ள வேளாண்மை அதிகாரிகள், தேவையான அளவு உரம் கையிருப்பு உள்ளது. கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் உரம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். வேளாண் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை கண்துடைப்பாகும். விவசாயிகளை ஏமாற்றும் செயல். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உரம் பதுக்கப்படுகிறது.

எனவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட கலெக்டர்கள் உரம் ஊழல் சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செப்.22ல் காலை 8 மணி முதல் பயணியர் விடுதி முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.

Related Stories: