தனியார் பயிற்சி நிலையங்களில் பணம் கொடுத்து பயின்றவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைகின்றனர் : திமுக எம்பி திருச்சி சிவா பேச்சு!!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை சுமார் 18 நாட்கள் நடக்கிறது. இதில் முதல் நாளான இன்று பல்வேறு கோரிக்கைகளுடன் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் சென்றனர். இதனிடையே திமுக எம்பி திருச்சி சிவா நிருபர்களிடம் கூறும்போது, சுமார் 12 ஆண்டுகளாக கற்றக் கல்வி அறிவை தூர எரிந்து விட்டு வெறும் 3 மணி நேரம் மட்டும் தேர்வு என்ற முறையில் சோதித்து மருத்துவக் கல்விக்கு மாணவர்களை தேர்வு செய்வது ஏற்கக்கூடியது இல்லை. மேலும் பொதுக்கல்வி இல்லாத நாட்டில் பொதுத்தேர்வு எப்படி நடத்த முடியும்? .தனியார் பயிற்சி நிலையங்களில் பணம் கொடுத்து பயின்றவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைகின்றனர். ஆனால் ஏழை, எளிய மக்களால் முடிவதில்லை.

வெற்றி பெறும் அனைவருக்கும் மருத்துவக் கல்வியில் இடம் உண்டு என்ற உத்தரவாதமும் கிடையாது. இதில் நாட்டின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில் இல்லாமல், அதை மேலும் பின்னோக்கி இழுத்துச் செல்லவதாக இருக்கும் அதனால் புதிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும். அதேப்போன்று மும்மொழிக்கொள்கை திணிப்பு, கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டிப்பறிக்கும் முயற்சி ஆகும். இதைத்தவிர சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீட்டில் அனைத்திற்கும் முரணான ஒரு முயற்சி மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகிறது. மாநிலக் கவுன்சிலுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படா விட்டால் அவர்களை மத்திய அரசே நியமிப்பது என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயல் ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: