கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின் பக்தர்கள் வருகையால் களைகட்டிய வேளாங்கண்ணி

கீழ்வேளூர்: 5 மாதங்களுக்கு பின் கொரோனா ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதால், வேளாங்கண்ணிக்கு பக்தர்கள் கூட்டம் வர தொடங்கியுள்ளது.  இதனால் வேளாங்கண்ணி களைகட்ட தொடங்கியுள்ளது.உலக பிரசித்தி பெற்ற நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆரோக்கிய மாதவின் பிறந்த  நாளையொட்டி ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி 10 நாட்கள் வரை நடைபெறும். உலகின் பல்வேறு நாடுகள்,  வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் யாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவார்கள். திருவிழா  நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கொரோனா பரவல் காணமாக கடந்த மாதம் 29ம் தேதி  வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடி ஏற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் யாரையும் அனுமதிக்க  வில்லை.

இந்நிலையில் வேளாங்கண்ணி 10 நாள் திருவிழா கடந்த 8ம் தேதியுடன் முடிவு பெற்றதால் அனைத்து பக்தர்களும், சமூக இடைவெளியுடன்  முககவசம் அணிந்தவர்கள் மட்டும் கைகளை சானிடர் கொண்டு சுத்தம் செய்து கொண்டு கடந்த 9ம் தேதி காலை முதல் அனுமதிக்கப்பட்டு வருகிறது.தற்போது பேருந்து சேவை உள்ளதால் வெளிமாவட்ட, வெளி மாநில பக்தர்கள் ஏராளமானவர்கள் பேருந்து மூலம் வந்து செல்கின்றனர். மேலும்  ஆண்டு தோறும் வழக்கம் போல் திருச்சி, திண்டுகல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயில் திருவிழாவிற்கு  பாதயாத்திரையாக வந்து செல்லும் பக்தர்கள் இந்த ஆண்டு திருவிழா முடிந்த பின் கோயிலில் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட தொடங்கிய  பின், ஏராளமான பக்தர்கள் நடைபயணமாக வேளாங்கண்ணிக்கு வர தொடங்கியுள்ளனர்.

இதனால் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதி  உரிமையாளர்கள், வேளாங்கண்ணியில் கடை நடத்தி வருபவர்கள், ஓட்டல், தேனீர் கடை நடத்தி வருபவர்கள் என அனைத்து வியாபாரிகளும்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 5 மாதமாக வேளாங்கண்ணி மாதா கோயில் வெறிச்சேடி இருந்த நிலையில் கடந்த 9ம் தேதி முதல் வெளி மாவட்ட,  வெளி மாநில பக்தர்கள் அனுமதிக்கப்டடதால் வேளாங்கண்ணி களைகட்ட தொடங்கியுள்ளது.

Related Stories: