திருச்செந்தூர் - பழனி ரயில் ரத்து அறுபடை வீடுகளுக்கான ரயில் ‘அம்போ’: எக்ஸ்பிரசாக மாற்றி இயக்கப்படுமா?

நெல்லை: அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் நெல்லை மார்க்கமாக இயக்கப்பட்ட ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த  மனவேதனையில் உள்ளனர். நல்ல கூட்டத்துடன் இயங்கிய ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர்.ரயில்கள் இயக்கம் நாடு முழுவதும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில், பல்வேறு ரயில்களை ரத்து செய்து புதிய அட்டவணையை  ரயில்வே துறை வெளியிட்டது. தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியல்படி  நெல்லையை மையமாக கொண்டு இயங்கும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள்  ரயில் முக்கியமானதாகும்.கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர் கோரிக்கை வைத்து போராடி பெற்ற ரயிலை தெற்கு ரயில்வே ரத்து செய்திருப்பது பயணிகள் மத்தியில்  அதிருப்தியை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் ரயில்கள் இயக்கவேண்டும் என்ற கோரிக்கை  வெகுகாலமாக இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூரில் இருந்து 3ம் படை வீடான  திருப்பரங்குன்றம் வழியாக  பழனிக்கு ரயில் இயக்கப்பட்டது.

இந்த ரயிலில் திருச்செந்தூர் மட்டுமின்றி நெல்லை, மதுரை என பல இடங்களில் இருந்து பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இந்த ரயிலுக்கு கிடைத்த  வரவேற்பை கண்டே தெற்கு ரயில்வே, பின்னர் இந்த ரயிலை பொள்ளாச்சி வரையும், அதன்பின்னர் பாலக்காடு வரையும் நீட்டிப்பு செய்தது.  தென்மாவட்டங்களில் இருந்து கூட்டத்தை அள்ளிச் சென்ற இந்த ரயில் தற்போது ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்களை மனவேதனைக்கு  உள்ளாக்கியுள்ளது.திருச்செந்தூர் - பழனி ரயில் கடந்த ஓராண்டாகவே சரியான முறையில் இயக்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 21ம் தேதி  ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதற்கு முன்பாகவும் கூட நெல்லை - மதுரை மார்க்கத்தில் நடந்த இரட்டை ரயில்பாதை பணிகள் காரணமாக,  அந்த ரயில் அடிக்கடி ரத்து செய்யப்பட்டு வந்தது. இதனால் மதுரை கோட்டத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டது. இரட்டை ரயில்பாதை பணிகள்  முடிவடைந்தவுடன் திருச்செந்தூர் - பாலக்காடு ரயில் முன்புபோல இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்த  ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்த தியாகராஜநகர் செல்வக்குமார் கூறுகையில், ‘‘அறுபடை வீடுகளில் 3 வீடுகளை தரிசிக்க  வசதியாக திருச்செந்தூர்-பழனி ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலில் நெல்லை, தூத்துக்குடி பக்தர்கள் பழனிக்கு எளிதில் ஏறிச்சென்றனர். பழனி  முருகனின் ஆண்டிக்கோலம், ராஜ அலங்காரம், அந்தண கோலம் ஆகியவற்றில் ராஜ அலங்காரம் பிரசித்தமானது. மாலை நேரத்தில் முருகனின் ராஜ அலங்காரத்தை காணும் வகையில் திருச்செந்தூர் - பழனி ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் நிறுத்தப்பட்டதால்  பக்தர்கள் மட்டுமின்றி, பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும் வியாபாரிகளும் பாதிக்கப்படுவர். மறுமார்க்கமாக கேரள பகுதிகளில் இருந்து நெல்லை,  தூத்துக்குடிக்கு வருவோரும் இந்த ரயிலை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். எனவே நிறுத்தப்பட்ட இந்த ரயிலை, அதே வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ்  ரயிலாக இயக்கிட தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: