மண்ணை விட்டு பிரிந்தாலும் மனைவிக்கு சிலை வைத்து வழிபாடு: மதுரையில் கணவர் மரியாதை

மதுரை: மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர், மறைந்த மனைவியின் நினைவாக வீட்டில் அவரது சிலை வைத்து வழிபட்டு வருகிறார். மதுரை, மேலப்பொன்னகரத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (74). இவரது மனைவி பிச்சைமணி (68). மூன்று மகள்கள் உள்ளனர். ஆக.8ம் தேதி  உடல்நலக்குறைவில் பிச்சைமணி இறந்தார். வாழ்வில்  உற்ற துணையாக இருந்துவந்த மனைவி இறந்ததால் சேதுராமன் மனம் தவித்தார். மனைவி  இல்லாத வீட்டில் வசிப்பதே அவருக்கு இயலாத காரியமாக இருந்தது.கர்நாடக மாநிலம் கொப்பால் கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சீனிவாஸ் குப்தா, தன் மனைவிக்கு சிலிக்கான் சிலை வடித்த தகவல் இணையத்தில்  வைரலானதை பார்த்தார். உடனே, மதுரையை சேர்ந்த ஓவியர் மருது,  சிற்பியான பிரசன்னா ஆகியோரை தொடர்பு கொண்டு தனது மனைவிக்கு  சிலை வடிக்கவேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்து, 16 போட்டோக்களை கொடுத்துள்ளார். 22 நாட்கள் உழைப்பில் பைபர் மெட்டீரியலைக்  கொண்டு  பிச்சைமணி அமர்ந்திருப்பதைப்போல 6 அடி சிலை செய்து கொடுத்துள்ளனர்.

மனைவி இறந்து 30ம் நாள் நிகழ்வு முடிந்த நிலையில், பிச்சைமணியின் சிலையை வீட்டில் வைத்து வழிபடத் துவங்கி இருக்கிறார்.  அரசு  மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளர் பணியில் இருந்த சேதுராமன், பின்னாளில் அரசு வேலையை விட்டு சொந்தமாக ரத்த வங்கி தொடங்கினார்.  வாழ்வின் பல்வேறு கஷ்டமான சூழலிலும் மனைவி பிச்சைமணிதான் உற்ற தோழியாக உடனிருந்து ஊக்கம் கொடுத்து உயர்த்தி இருக்கிறார். இந்த  உழைப்பால் மதுரையின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக சேதுராமன் உயர்ந்துள்ளார்.சேதுராமன் கூறும்போது, ‘‘என் இன்ப துன்பங்களில் 48 ஆண்டுகள் உடனிருந்த மனைவியின் மறைவை மனம் ஏற்கவில்லை. இவருக்கு சிலை  வைத்து தொடர்ந்து வழிபடத் தீர்மானித்தேன். அதன்படி தத்ரூபமாக மனைவி சிலை வந்திருக்கிறது. இந்த சிலை இருப்பது, என் மனைவி அருகில்  இருப்பதாகவே உணர்கிறேன்’’ என்றார்.

Related Stories: