டிஆர்டிஓ.வுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு ஹைப்பர் சோனிக் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றி: பாதுகாப்பு துறையில் புதிய மைல்கல்

புதுடெல்லி: ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப அதிவேக ஏவுகணை சோதனை நேற்று ஒடிசாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆயுத உற்பத்தியில் அடுத்த கட்டத்தை எட்டும் முயற்சியாக, அதிவேகமாக செல்லும் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் தயாரிப்பில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஈடுபட்டுள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப சோதனை வாகனம் (எச்எஸ்டீடிவி) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் ஏவுதளத்தில் இருந்து ஹைப்பர் சோனிக் அதிவேக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தை அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மட்டுமே வெற்றிகரமாக சோதனை செய்துள்ளன. தற்போது அந்த வரிசையில் இந்தியா இணைந்துள்ளது. இதைத் தொடர்ந்து, டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ``பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியாவை எட்டுவதில், புதிய மைல்கல் சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றிய டிஆர்டிஓ நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள்’’ என்று கூறி உள்ளார். ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் ஸ்க்ராம்ஜெட் என்ஜின் வெற்றிகரமாக இயங்க தொடங்கியது. இதனால் விமானம் அதிவேகமாக உந்தப்பட்டு ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்தது. வினாடிக்கு 2 கி.மீ. தூரம் வீதம் 20 வினாடிகள் வெற்றிகரமாக இயக்கப்பட்டது.

டிஆர்டிஓ அதிகாரி ஒருவர் கூறிய போது, ``இந்த உள்நாட்டு தொழில்நுட்பம் எதிர்காலத்தில் ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் பயணிக்கும் ஏவுகணைகள் தயாரிப்புக்கு வழிவகுக்கும். உள்நாட்டில் உருவாக்கிய ஸ்க்ராம்ஜெட் உந்துவிசை முறையை பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம், அனைத்து முக்கியமான தொழில்நுட்பங்களும் இப்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேறும்,’’ என்று குறிப்பிட்டார். இந்த சோதனையின் மூலம் நீண்ட தூர ஏவுகணை அமைப்புகள் மற்றும் வான்வழி தளங்களில் இருந்து இந்தியா தற்காத்து கொள்ளும் திறனை டிஆர்டிஓ வளர்த்து கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: